பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

45

“இந்திய நாட்டின் விடுதலைப் போருக்குரிய துணைக் கருவியாகப் பயன்படுத்தவே கப்பல் கம்பெனியை நான் படாதபாடுபட்டு நாடெங்கும் அலைந்து ஆரம்பித்தேன். இதை உங்களைவிட வெள்ளையர்கள் நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பலசதித் திட்டங்களைத் தீட்டினார்கள். ஆனால், இந்த மண்ணின் மைந்தர்களான நீங்களோ எங்களுக்குப் பணம்தான் முக்கியம்! லாபம்தான் நோக்கம் என்று என்னையே திசை திருப்புகின்றீர்கள்! எனக்கு இந்த ஈனச் செயல்கள் எல்லாம் பிடிக்காது. நான் கலெக்டர் எச்சரிக்கையினையே புறக்கணித்தேன் - தேச பக்திக்காக! கப்பல் நிர்வாகத்தினர் கட்டளையினையும் கம்பெனியைக் கலைப்போம் என்பதையும் புறக்கணிக்கின்றேன். நாட்டின் சுதந்திர உணர்ச்சிக்காக” என்று கூறிவிட்டு செயற்குழுவை விட்டு விர்ரென்றுப் புறப்பட்டு விட்டார்.

ஏற்கனவே செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின்படி மார்ச் 9-ம் தேதியன்று விபின் சந்திர பாலின் சிறை மீண்ட விடுதலைத் திருநாள் நெல்லையில் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கையோடு எல்லா திட்டங்களையும் ஒழுங்கான முன்னேற்பாடாகவே செய்து வைத்திருந்தார்கள்.

சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் போலீசார் தடையுத்தரவை மீறி, விழா ஊர்வலத்திலே பவனி வந்து கொண்டிருந்தார்கள். அதே போல, பொதுக் கூட்ட மேடையிலே நெருப்புக் கனற்துண்டுகளை சொற்பிரயோகங்கள் மூலமாக வெள்ளையனை எதிர்த்து சிவா தகித்துக் கொண்டிருந்தார். பிறகு பேசிய சிதம்பரம் தனது சூறைக் காற்று