பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

கப்பலோட்டிய தமிழன்

பின் விளைவுகளும், மேலும் தொல்லைகளும் அதிகமாக ஆகிவிடுமே. அதற்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சிதம்பரம், சிவாவுடன் திருநெல்வேலி வந்தார். மார்ச் 12- ஆம் தேதி சிதம்பரமும் - சிவாவும் விஞ்ச் துரையைப் பேட்டி கண்டனர். இருவரையும் நேரில் கண்ட கலெக்டர், சிதம்பரம் நீங்கள் கப்பலோட்டியது முதல் குற்றம்; அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டியது இரண்டாவது குற்றம்; பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று கோஷம் போடுமாறு தூண்டிவிட்டது மூன்றாவது குற்றம் என்று இருவர் மீதும் இந்த மூன்று குற்றங்களையும் கலெக்டர் விஞ்ச் சுமத்தினார்.

எங்களது நாட்டில் பொதுமக்களோடு நாங்கள் கூடிப் பேசியது குற்றமா? அதற்கு உங்களுடைய அனுமதி எங்களுக்கா வேண்டும்? எங்களது தாய்நாடு இந்தியா. அது நாங்கள் பிறந்த மண்! அந்த பூமியை வாழ்க என்று நாங்கள் கோஷிப்பது எப்படி குற்றமாகும்? எங்களது வாணிபம் வளர, எங்களுடைய பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, நாங்கள் சொந்தமாக, எங்களுடைய பணத்தில் கப்பல்கள் வாங்கி வளம் பல பெருக கப்பல் ஒட்டுவது எப்படிக் குற்றமாகும்? எங்களுடைய சதைகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப்படுத்தினாலும், நாங்கள் எங்கள் மக்களுக்காகப் பணியாற்றுவதை ஒரு போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களது இதயத்திலே இருந்து பொங்கி எழும் சுதந்திர உணர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. இது உறுதி! என்று விஞ்ச் துரை புகார்களுக்கு சிதம்பரம் பதில் கூறினார்.