52
கப்பலோட்டிய தமிழன்
திடீர் திடீரென்று தூத்துக்குடி நகரமும் தீயிலே எரிவதைக் கண்ட போலீஸ் படைகள், அங்கேயும் விரைந்து சென்று கலகத்தை அடக்க முயன்றார்கள்.
இவ்வளவு போலீஸ் படைகளைக் கலவர இடங்களுக்கு அனுப்பி வைத்த வெள்ளையராட்சி, அதற்கான எல்லா செலவுகளையும் பொதுமக்களிடமே வசூலிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கெங்கு வெள்ளையர்கள் குடியிருந்தார்களோ, அங்கே எல்லாம் போலீஸ் படைகளும், ராணுவப் படைகளும் இரவு பகலாகக் காவல்கள் இருந்தார்கள்.
ஆங்கிலேயரின் இந்த அராஜகங்களைக் கண்ட குருசாமி ஐயரும், மற்றும் இரண்டு பிரமுகர்களும் சென்னை சென்று, ஆயுதங்களை ஏந்தி அலையும் ராணுவப் படைகளையும், போலீஸ் படைகளையும் உடனே திரும்பப் பெற வேண்டினார்கள். ஆனால், அவர்களது வேண்டுகோளை வெள்ளையராட்சி நிராகரித்து விட்டது.
இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக, நெல்லை நகரப் போலீசார், திருநெல்வேலி, தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய பகுதிகளிலே உள்ள பொதுமக்கள் 80 பேர்களைக் கைது செய்தனர். அவர்களுள் ஒரே ஒருவர்தான் விடுதலையானார். மற்ற 79 பேர்களும் பலவிதப் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டு, பலவித தண்டனைகள் வழங்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.