பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. வ.உ.சி. பேச்சும், பாரதி பாட்டும்
பிணத்தை உயிரூட்டிப் பேசவிடும்!

கலெக்டர் விஞ்ச் துரையால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் அடைக்கப் பட்ட பின்பு, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, திருநெல்வேலி மாவட்ட துணை மாஜிஸ்திரேட் ஈ.எச்.வாலேஸ் என்ற வெள்ளைக்காரர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

சிதம்பரம் பிள்ளைக்காக, தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்குரைஞர் என்.கே.ராமசாமி நீதிமன்றத்தில் வாதாடினார். சிதம்பரனார் வக்கீலிடம் மாஜிஸ்திரேட் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அதனால் அவர் எதிர் வழக்காட மறுத்து விட்டார்.

வாலேஸ், வழக்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றி விட்டார். இந்த நீதிமன்றத்தில் சிதம்பரம்பிள்ளை வழக்கு இரண்டு மாதம் நடந்தது. வழக்குரைஞர்களான சடகோபாச்சாரியார், நரசிம்மாச்சாரியார், வேங்கடாச்சாரியார் மூவரும் சிதம்பரனாருக்காக வாதாடினார்கள். ஆங்கிலேயர் அரசுக்காக, பாரிஸ்டர் பவல், ரிச்மண்ட் என்பவர்கள் வாதாடினார்கள்.