பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கப்பலோட்டிய தமிழன்

பணி. அப்படிப்பட்டவரை வெள்ளைக்கார சிறையதிகாரிகள் மாடுபோல எண்ணும்படி செக்கின் நுகத்தடியைச் சங்கிலியாலே பிணைத்து, அந்தச் சங்கிலியை இடுப்பிலே இறுகக்கட்டி, அதைக் கைகளிலே பூட்டி அவரை இழுக்க வைத்து வேதனைப்படுத்தி, கொடுமையின் சிகரத்திலே அவரை நிற்க வைத்துத் தினந்தோறும் வேலை வாங்கி வந்தார்கள்.

சிதம்பரம் பிள்ளையைச் செக்கை இழுக்கும் மாடுபோல மாற்றிவிட்டது சிறையதிகாரம் அதனால், ஒருநாள் செக்கை மாடு போல இழுக்க முடியாமல், களைப்பு ஏற்பட்டு மயங்கிக் கீழே சுருண்டு விழுந்து விட்டாராம்! பிறகு, மனித நேயமுடைய கைதியில் ஓரிருவர் அவரைத் தூக்கி நிற்க வைத்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்த பின்பு, திடீரென அங்கே வந்த அதிகாரிகள் மீண்டும் சிதம்பரனாரைச் சங்கிலியோடு சேர்த்துப் பிணைத்து மாடுபோல செக்கை இழுக்குமாறு சாட்டையைக் காட்டி மிரட்டினார்களாம்.

சிதம்பரம் செக்கை இழுக்கும் போது, அவருக்கு செக்கை இழுப்பது போன்ற நினைவே இருக்காதாம். சுதந்திர தேவியின் திருக்கோயிலைச் சுற்றி வலம் வருவது போலவே அவர் எண்ணிக் கொள்வாராம்!

சிறையிலேதான் இந்த சித்ரவதைகள் என்றால், சிறைக்கு வெளியேயும் இருந்து அவருக்குத் துன்பங்கள் தொடர்ந்து வந்தவாறே இருந்தன. என்ன அந்தத் துயரங்கள்?

சிதம்பரனார் சிறை புகுந்ததும், அவர் அரும்பாடுபட்டு ஆரம்பித்த சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகமும் மூடப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி சிதம்பரனாரின் கப்பல் நிறுவனத்தை எப்படியும் அழிப்பது என்றே கங்கணம் கட்டி அலைந்ததல்லவா?