பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

65

அதற்கேற்றவாறு, சுதேசி கப்பல் கம்பெனியால் பிரிட்டிஷ் போட்டி வாணிகத்தைச் சமாளிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சிதம்பரனாருக்கு 40 வருடங்கள் தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்ட உடனே, சுதேசி நிறுவன நிர்வாகிகளுக்குப் பயம் ஏற்பட்டு விட்டது. அதனால் வ.உ.சி. துவங்கிய கப்பல் கம்பெனியைக் கலைத்து விட்டார்கள்.

கலைத்தது மட்டுமன்று, என்ன பாடுபட்டு இரண்டு கப்பல்களை சிதம்பரனார் வாங்கினாரோ, அந்தக் கப்பல்களை சிதம்பரனாரைக் கேட்காமலேயே வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனிக்கே விற்று விட்டார்கள் என்ற கொடுமையான செய்திகளைக் கேட்ட சிதம்பரனார், அனுபவிக்கும் சிறைக் கொடுமைகளைவிடக் கோரமான, கொடுமையான வேதனைகளை அவர் சிறையிலே அனுபவித்தார்.

எவ்வளவு கஷ்டப்பட்டு காலிபா கப்பலை வாங்கி வந்தோம். அதை அழிக்க நினைத்த வெள்ளையனுக்கே அதை விற்று விட்டார்களே மாபாவிகள் என்று எண்ணி உணவின்றியும் உறக்கமின்றியும் வேதனைகளோடே அவர் உள்ளம் நைந்தார்.

சிறையிலே சித்ரவதைகளை நாள்தோறும் ஏற்றுக் கொண்டிருந்த சிதம்பரம் பிள்ளைக்கு, மேலும் பல துன்பச் செய்திகள் தினந்தோறும் வெளியே இருந்து வந்து துன்புறுத்தின. அதாவது, சுதேசிக் கப்பல் நிறுவனம் மூடப்பட்டதற்கு சிதம்பரனாரின் தீவிரவாத அரசியல் கொள்கையே காரணமாதலால் நிர்வாகிகள் இழந்த பொருள்களுக்குரிய நஷ்ட ஈட்டை சிதம்பரனார்தான் கொடுக்க வேண்டும் என்று சுதேசிக் கப்பல் கம்பெனி