பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

79

சிதம்பரம் பிள்ளை மறுபடியும் எப்படியாவது பறிமுதல் செய்யப்பட்ட தனது வக்கீல் சன்னத்தைத் திரும்பப் பெற முயன்றார். அப்போது அவருக்கு இ.எச்.வாலஸ் என்ற வெள்ளைக்கார நீதிபதி உதவி செய்தார். வெள்ளை மனிதர்களிலும் சில கண்ணியவான்கள் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அந்த நீதிபதியின் பேருதவியால் சிதம்பரம் பிள்ளைக்கு மீண்டும் வக்கீல் சன்னத்து கிடைத்தது.

நன்றியின் திலகமாக நடமாடிய சிதம்பரம், தனது மகன் ஒருவருக்கு அந்த நீதிபதியின் பெயரான வாலஸ் என்பதின் அடையாளமாக, வாலீஸ்வரன் என்ற பெயரை வைத்துப் போற்றினார். அதுபோலவே, அடிக்கடி பொருள் உதவி செய்த தூத்துக்குடி, ஆறுமுகம் பிள்ளையின் பெயரை மற்றொருமகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டு நன்றி மறவா நாயகரானார்.

சிதம்பரம் பிள்ளை சென்னையில் இருக்கும்போது வறுமை நெருப்போடு வாழும் நிலையிலே நாட்களை நகர்த்தினார். அப்போதும், இவ்வளவு கஷ்ட நிலையிலும், அவர் பொது வாழ்க்கைப் பணி மீது வெறுப்புக் கொள்ளவில்லை.

சென்னை பெரம்பூர் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தீவிரமாகப் பணி புரிந்தார். இந்தப் பதவியிலும் தனது தீவிரத்தைக் காட்டி பல ஆண்டுகள் உழைத்தார்.

வாலஸ் பெருமகன் செய்த உதவியால், சிதம்பரம் பிள்ளை வக்கீல் சன்னத்து சற்றுத் தாமதமாகவே கிடைத்தது. அதைப் பெற்ற சிதம்பரனார் நேரே தனது ஊரருகே உள்ள நகரமான கோயில்பட்டிக்குச் சென்றார். அங்கே மீண்டும் வக்கீலானார்! மறுபடியும் துத்துக்குடி நகருக்கே சென்றார்.