பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

81

அந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்பெஷல் ரயிலில் பயணமானார்கள்.

சென்னையிலிருந்து கல்கத்தா சேருகின்ற வரையில் ரயில் வண்டியிலும், கல்கத்தா சென்ற பின்பு பிரதிநிதிகள் தங்கியிருந்த இடங்களிலும், காங்கிரசில் காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்ட நிமிஷம் வரையிலும் சிதம்பரம் பிள்ளை ஓயாமல் அந்தத் தீர்மானத்துக்கு விரோதமாக வாக்களிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு சென்னை மாகாணப் பிரதிநிதியையும் தனித்தனியே சந்தித்து வேண்டிக் கொண்டார்.

இரயில் வண்டித் தொடரிலுள்ள ஒவ்வொரு பெட்டியாகச் சென்று காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானத்தை சிதம்பரனார் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இவ்வாறு அவர் செய்து வந்தபோது நாமக்கல் கவிஞர் இருந்த இடத்துக்கு வந்தார். ஆனால், அவர்தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று சிதம்பரம் பிள்ளைக்குத் தெரியாது. அதனால், அவரருகே இருந்த நண்பர் ஒருவர் இவர்தான் நாமக்கல் கவிஞர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

அறிமுகம் செய்து வைத்தவர், திலகர் இறந்த போது நாமக்கல்லார் பாடியிருந்த ஒரு பாடல், பத்திரிக்கையில் வெளியாகி இருந்ததை சிதம்பரம் பிள்ளையிடம் கொடுத்தார். அதைப் பெற்ற பிள்ளை அப்பாடலைப் படித்து விட்டு நாமக்கல் கவிஞரைப் பாராட்டிய பின்பு, காந்தியடிகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு மீண்டும் அங்குள்ள நாமக்கல் ஊர் பிரதிநிதிகளை கேட்டார்.