பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

87

சேர்ந்திருப்போம் அல்லவா? என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரைத் திரும்பக் கேட்டார்.

'உண்மைதான்; இது சரியான கேள்விதான். ஆனால், உங்கள் வண்டியை இங்கே மூன்று மணி நேரம் காக்கப்போட வேண்டுமென்பது ஏற்பாடல்ல. அது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டது. இந்த ஸ்டேஷனில்தான் மெயில்வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால்போக வேண்டும் என்பது ‘டிராபிக் மானேஜருடைய உத்தரவு. மெயில் வண்டி இன்றைக்கு சுமார் மூன்று மணி நேரம் லேட்’. அதனால், இந்த சங்கடம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யலாம்? என்றார்.

‘என்ன செய்யலாம்? என்றா கேட்கிறீர்கள். எங்கள் வண்டியை உடனே விடலாம் என்கிறேன்! மூன்று மணி நேரம் லேட் ஆன மெயில்வண்டி இன்னும் கொஞ்சம் லேட் ஆகிவிட்டால் என்ன முழுகிப்போகும்? எங்கள் வண்டியை விடச்சொல்லுங்கள் என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.

அப்படிச்செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றார் ரயில் நிலைய அதிகாரி,

அப்படிச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், எப்படிச் செய்வது சரியென்று எங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டே சிதம்பரனார் வண்டியை நோக்கி வந்தார்.

இதற்குள் வண்டியில் இருந்த எல்லா இளைஞர்களும் இறங்கி வந்து சிதம்பரம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து சிதம்பரம் பிள்ளை ஒரு சொற்பொழிவு செய்து அந்த மெயில் வண்டி நம்முடைய வண்டிக்கு முன்னால்போகக் கூடாதென்று நாமெல்லாரும்