பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 கடற்கரை விளையாட்டு. ஸ்ரீநிவாசனும் லட்சுமியும் அடிக்கடி சமுத்திரக் கரைக்குப் போவதுண்டு. குழைந்தைகள் தாய் மடிமீ தேறி 'மண்டி' போட்டு நின்று பாய்ந்து விளையாடு வதுபோல், அலைகளாகிய குச-லவன் இவர்களைப் போன்ற குழந்தைக் கூட்டங்கள், தாயாகிய கடலின் மடிமீது ஏறி நின்று ஓடியாடிப் பாய்ந்து கரையின் மீது தவழ்ந்து மணலை வாரி ஜலத்திலும் , ஜலத்தை வாரி மணலிலும் போட்டுக் கருமணல் மத்தியில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் எப்படியோ அப்படிச் சிறிய அளவற்ற பொன்மணல்கள் பிரகாசிக்க பற் பல விசித்திரக் கோலங்களை இயற்றி அழித்து பின் னும் இயற்றி நுரைத் தொகையையும் முத்தையும் சிந்தி நத்தைகளையும், சங்குகளையும், கட்டைகளையும், உருட்டிப் புரட்டிப் பரப்பிப் புதைத்து ஒரு கணமும் ஓய்வொழிவில்லாத இவ்வித பால்ய லீலைகளைச் செய்து கொண்டிருக்கின்ற கடற்கரைக்கு ஒருநாள் அந்திப் பொழுதில் ஸ்ரீநிவாசனும் லட்சுமியுமாக வந்தார்கள். அன்று அஸ்தமன அழகை என்னென்று சொல்வது! பகல் முழுவதும் காணக் கண் கூசும் காந்தியுடன் ஆகாயம் பூமியாகிய இவ்விரு உலகங்களையும் தனது ஆஞ்ஞைக்குள்ளடக்கித் தனியரசுபுரிந்த காம்பீரச் செல்வனாகிய சூரியன் விருத்தாப்பிய தசையடைந்து, அஜ, ரகு, திலீபாதி யரசர்களைப் பார்த்துத் தானும் ராஜ்யத்தைவிட்டுத் தவஞ் செய்யக் கருதினான் போல், சாந்தஸ்வரூபமாய மாறிச் செந்தாமரை போல் மலர்ந்த தனது இனிய முகத்தை யாவரும் காணக்காட்டி அர்க்கியாதிகளால் தன்னை வாழ்த்தும் தனது பிரஜை களிடமிருந்து விடை பெற்று (செவ்வானமாகிய)