பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vii மணிமேகலை வெளிப்படையாகவே பெளத்தக் கொள்கைகள், நம்பிக்கைகள் என்பவற்றைப் பிரசாரம் செய்கிறது. பெருங்கதை என்று கூறப்பெறும் உதயணன் கதை ஒரு பகுதியே கிடைத்திருப்பினும் அதிலும் அன்றைய சமய வாடை ஓரளவு வீசாமல் இல்லை. எனவே சங்ககாலம் தொடங்கிப் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைத் தோன்றிய காப்பியங்களை எடுத்துக் கொண்டால், சமயப் பிரசாரம் செய்யாமல் மனித இனத்துக்கு இன்றியமையாத நீதிகளையும், வாழ வேண்டிய முறையையும் கூறுவதே தலையாய நோக்கம் என்று கொண்டு தோன்றிய காப்பியங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிலப்பதிகாரம்; அடுத்தது கம்பனின் இராமகாதை. சிலப்பதிகாரம் சைன சமய முனிவரால் இயற்றப் பெற்றதாகும். அவர்கள் கடவுட் கொள்கையை ஏற்காதவர்கள். சைன சமயப் பிரசாரம் அதிகம் செய்யாததுடன், கடவுட் கொள்கையையும் சிலம்பு பேசவில்லை. இவைகளின் இடையே கம்பநாடன் காப்பியம் தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டு, பிற காப்பியங்கள் எதனுடனும் ஒப்புமை கூற முடியாதபடி தனித்து விளங்குவதை அறிய முடிந்தது. சிலம்பு முதல் பெரிய புராணம் வரை உள்ள காப்பியங்கள் அனைத்தும், காப்பியம் என்ற பெயருள் அடக்கப் பெற்றாலும், எந்த ஒரு பொது இலக்கணத்தையும் பின்பற்றி இவை எழுந்தன என்று கூறுமாறு இல்லை. இவை ஒன்றுபோல் மற்றொன்று இல்லை. இவை அனைத்தையும் கற்ற ஒருவன் இவற்றின் அடிப்படையில் காப்பிய இலக்கணம் என்ற ஒன்றை வகுக்க முற்பட்டால், அது இயலாத செயல் என்பதை விரைவில் அறிந்துகொள்ள முடியும். கம்பனுடைய காப்பியக் கட்டுக் கோப்பு, காப்பிய உத்திகள், பாத்திரப் படைப்பு, பாவிகம் என்பவை அவனுக்கு மட்டுமே, அவனுடைய நூலுக்கு மட்டுமே உரியன என்ற முடியிற்குத்தான் வர வேண்டி உள்ளது. தன் புகழ் நிலைக்கக் காப்பியம் அமைத்தான் என்ற எண்ணமும், சமயப் பிரசாரம் செய்யக் காப்பியம் செய்தான்