பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii என்ற எண்ணமும், இக் காப்பியத்தை மேலும் கற்கத் தொடங்கியவுடன் அடிபட்டுப் போயின. அன்றுவரை யாரும் செய்ய முடியாத முயற்சி ஒன்றை இவன் மேற்கொண்டான் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது. கல்வியில் பெரியவன் கம்பன்' என்ற முதுமொழி உண்மை என்னும்படி இவன் கல்லாத கலையோ, வேதக் கடலோ, உபநிடதங்களோ இல்லை என்பதையும் ஓரளவு அறிய முடிந்தது. இத்துணை நூல்களைக் கற்றிருப்பினும், இவனை அதிகம் ஈர்த்த நூல் திருக்குறளே’ என்ற உண்மையையும் அறிய முடிந்தது. திருக்குறள் ஒப்பற்றதும், கால தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பதும் ஆகிய நீதிநூல் என்ற முறையில், இவன் அதில் ஈடுபட்டானோ என ஆராய்கையில் மற்றோர் கருத்தும் மெள்ளத் தோன்றல் ஆயிற்று. தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்டு நன்கு வளர்ந்துள்ள இத் தமிழ்ச் சாதியின் நாகரிகம், பண்பாடு என்பவற்றை நன்கு ஆய்ந்த வள்ளுவப் பேராசான், இந்த நாகரிகத்தில், வெளியில் தெரியாமல் புரையோடிப் போயிருந்த பெருங்குறையை இலைமறை காயாகப் பல இடங்களிலும், வெளிப்படையாகச் சில இடங்களிலும் சுட்டிக்காட்டினான் என்பதைக் கம்பன் அறிய நேர்ந்தது. ஏனையோர் போலப் பொதுவான நீதிகளைக் கூறியதுடன், இத் தமிழ்ச்சாதிக்கு மிக இன்றியமையாத சில நீதிகளையும் அவன் கூறியிருந்தான். அவற்றுள் மிக மிக முக்கியமானவை புலனடக்கம், பரத்தையர் தொடர்பு நீக்கம், கள்ளுண்ணாமை என்பனவாம். பாலுணர்ச்சி (Sex) என்பது மிக மிக வலுவானது என்ற மனத்தத்துவத்தை அறிந்த வள்ளுவன், அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டு செலுத்தினால் அதுவே மனிதனைத் தேவனாக மாற்ற உதவும் என்பதை அறிவுறுத்தவே, காமத்துப் பால் என்ற ஒன்றை வகுத்தான். இவன் கடிந்த சிலவற்றை எடுத்து, ஏன் இவற்றைக் கடிந்தான் என்று ஆராய்ந்த கம்பநாடன், அவன் கடிந்ததன் காரணத்தை உடனே விளங்கிக் கொண்டான். வள்ளுவன் காலம்