பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix வரை இத் தமிழர்கள் புலனடக்கத்தையோ, பரத்தையர் தொடர்பையோ, கள்ளுண்ணுதலையோ கடியவே இல்லை. கடியாதது மட்டுமன்று, அவற்றிற்குத் தம் வாழ்க்கையிலும், அதன் பயனாக இலக்கியத்திலும் இடம் தந்து போற்றினர். இத் தமிழ் நாகரிகத்திற்கு, இதனால் விளைந்த பேராபத்தை முதன் முதலில் கண்டு, எடுத்துக்கூறிய பெருமை முற்றிலும் வள்ளுவனையே சாரும் என்றாலும், அவன் காட்டிய சிவப்புக் கொடியை, அவனுக்குப் பின்வந்த புலவர்கள் யாரும் அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை. புலனடக்கம் என்ற பெயரில் இதனை வலியுறுத்தாவிடினும், புலனடக்கம் உடைய கண்ணகி, அது இல்லாத கோவலன், இருவரைப் பற்றியும் கூறும் சிலப்பதிகாரம் ஓரளவு இதன் பெருமையைக் கூறிற்று என்பதில் ஐயம் இல்லை. கண்ணகியின் கற்பின் பெருமையைச் சிலம்பு மிகுதியாகக் காட்டிற்றே தவிர, அக்கற்பு நிலைப்பதற்கு அடித்தளமாக இருந்தது அவள் புலனடக்கமே என்பதை அக்கால நிலைமைக்கு ஏற்ப வலியுறுத்திக் கூறவில்லை. பரத்தையிடம் சென்று வாழ்ந்த கோவலனை அச் சமுதாயம் கண்டித்ததாகவும் தெரியவில்லை. காரணம் மருதம் என்ற ஒரு திணையையே வகுத்த இத் தமிழர் கோவலனை எவ்வாறு கண்டிக்க முடியும்? இளங்கோவடிகள் அவனைக் கண்டிக்க விரும்பியிருப்பினும், அன்றையச் சூழ்நிலை அதற்கு இடந்தர வில்லை. எனவே, கோவலன் மாதவியிடம் சென்றது தவறு என்று கூற வழியில்லாத அடிகள், அவன் தன் மனைவியையும் வீட்டையும் மறந்துவிட்டு, மாதவியிடமே நீண்டகாலம் தங்கி விட்டதுதான் தவறு என்று கூறுபவர்போல, விடுதல் அறியா விருப்பினன் ஆயினன். வடு நீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்து (அரங்கேற்று - காதை 173, 174) என்று கூறிவிட்டார். வள்ளுவன் சுட்டியதை இளங்கோவும் நன்கு அறிந்திருந்தார் எனினும், தம்முடைய காப்பியத்தில் அதற்கு இடங்கொடுக்க அவர் துணியவில்லை. வள்ளுவனை அடியொற்றி இளங்கோ சென்றிருந்தால் கோவலனைக் கருணையின்றிக் கண்டிக்க