பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X நேரிட்டிருக்கும். அவனிடம் அன்பும், பரிவும் கொண்ட அடிகள் அதனை விரும்பவில்லை. மேலும் சைனராகலின் மனிதன் செயல்கள் அனைத்துக்கும் விதியையே காரணம் காட்டும் கொள்கை உடையவராக இருந்தார். எனவே கோவலன் தவறு இழைத்தான் என்று கூறாமல், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிற்று என்று அமைதி கூறி, அமைந்துவிட்டார். இந்த நிலையில் கம்பநாடன் பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவுடன் அந்த இலக்கியங்களைப் படைத்த தன் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் இருந்த குறைவு நிறைவுகளைக் கண்டான். தனக்குச் சில நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த வள்ளுவன், அவன் காலத்திலேயே தான் கண்டதை அறிந்திருந்தான் என்பதை அறிந்தான். அப்படி அறிந்தும், அக்குறைகளைச் சுட்டிக்காட்டிய வள்ளுவனை, ஏன் தமிழ்ச் சாதி அறிந்துகொண்டு தன் குறைகளைத் திருத்திக்கொள்ள முன்வரவில்லை என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, அவன் விடை தேடி இருத்தல் வேண்டும். இத்தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகின் எந்தப்பகுதியில் வாழ்கின்றவர் ஆயினும் மக்கள் தம் வாழ்வுக்கு அரண் செய்யும் நீதி நூல்களைப் போற்றி ஏற்றுக்கொண்டதாகவோ, அந்த நூல்களின்படி வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டதாகவோ தெரியவில்லை. அதிலும் அந்த நீதிநூல்கள் தோன்றிய சமுதாயம் வெற்றி உடையதாகவும் வாழ்க்கை வளம் உடையதாகவும் இருந்துவிட்டால், கேட்கவே வேண்டியதில்லை. வாழ்க்கை வளத்தில் இன்ப வேட்டை ஆடும் மனித குலம் நீதிநூல்களைப் பின்பற்றுவது முடியாத காரியம். அச்சமுதாயத்தில் வாழும் அறிவுடைப் பெருமக்கள் அந்த நீதிநூல்களைப் போற்றினர்; ஏத்தினர்; அத்துடன் சரி. அது வாழ்வில் இடம்பெற வேண்டிய ஒன்று என்பதைச் சிந்திப்பதும் இல்லை; அதனைச் செய்ய முயல்வதுமில்லை. இதன் காரணம் ஒன்று உண்டு. அடி வாங்கினால் ஒழிய, மனிதன் திருந்துவதும், வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயல்வதும் இல்லை; சமுதாயத்துக்கும் இது பொருந்தும். -