பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 121 எல்லாப் பெருஞ் செல்வம் என்று கவிஞன் என்ன பொருளில் கூறுகிறான்? பெருஞ் செல்வம் என்றாலே போதுமே அவ்வாறு இருக்க எல்லா என்ற அடைமொழி தேவையா? என்ற வினாவை எழுப்பினால்தான் கம்பன் வெளிப்படுவான். செவிச்செல்வம்', 'குழந்தைச் செல்வம், 'கல்விச் செல்வம், மனநிறைவுச் செல்வம் எனச் செல்வம் பல வகைப்படும். ஆகலின் அனைத்தையும் உளப்படுத்தவே எல்லாப் பெருஞ்செல்வம் என்று கவிஞன் கூறுகிறான். புலன்களோடு இசைந்த வாழ்வு மனிதன்தான் பிறந்த நிலையிலிருந்து உயர்ந்து மகாத் மாவாக ஆகவேண்டும். அதுதான் மானுடப் பிறப்பின் குறிக்கோளாகும். இந்தக் குறிக்கோளை அடையக் காடுகள் சென்று, கனசடை வைத்து, கடுந்தவம் இயற்றி அதன் மூலம் இதனைப் பெறப் பலர் முயல்கின்றனர். உலகைப் படைத்த இறைவன், அவ்வாறுதான் மனிதன் வாழவேண்டும் என்று கருதியிருந்தால் நிச்சயமாக இந்த உலகை இவ்வாறு படைத்திருக்க மாட்டான். அனுபவிக்க வேண்டிய பொருள்களைப் படைத்த இறைவன்தான், அவற்றை அனுபவிப்பதற்கு வேண்டிய பொறி புலன்களையும் மனிதனுக்குப் படைத்துள்ளான். இப் பொருள்களை அனுபவியாமல் காட்டுக்கு ஓடினால் அது இவற்றைப் படைத்த இறைவனையே அவமதிப்பதாகும்! யாருக்கும் பயன்படாத பொருள்களைப் படைத்த ஆண்டவன் பைத்தியக்காரனாகத்தான் இருத்தல் வேண்டும். ஆனால் அவன் பைத்தியக்காரன் அல்லன் அது உண்மை என்றால், இவ்வுலகும் அதன் பொருள்களும் நாம் அனுபவிக்கவே படைக்கப்பட்டன. இப் பொருள்களையும் அவற்றை அனுபவிக்கும் பொறி புலன்களையும், இப்பொறி புலன்களை ஆட்டிப் படைக்கும் மனம் என்ற ஒன்றையும், இந்த மனத்தை எசமானனாக நின்று ஏவிப் பணிகொள்ளும் அறிவையும்