பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 125 இராமனை அறத்தின் மூர்த்தி என்றும், அறத்தின் நாயகன் என்றும் பின்னர்க் கூறப்போகும் கவிஞன், இப்பொழுது வேண்டும் என்றே, இராமனுக்கு அந்த அடைமொழியைத் தராமல், அவன் தந்தையாகிய தசரதனுக்குத் தருகிறான். இவ்வாறு கூறுவதில் இரண்டு பொருள்கள் உள்ளன. இராமனைப் பெற்றதால் நல் அறமூர்த்தியானான் என்பது ஒரு பொருள்; நல்ல மூர்த்தியாதலால் இராமனைப் பெற்றான் என்பதும் ஒரு பொருள். வளர்ச்சி அடைந்துள்ள மனிதனுக்கு வேண்டப் படும் அடிப்படையான அறிவு, அருள், அறன், சாந்தம் என்பன அவன்பால் நிரம்பியிருந்தன என்று, அடுத்த பாடலில் கூறிவிட்டு, மேலே செல்கிறான் கவிஞன். தனிமனிதன் வேறு: அரசன் வேறு சாதாரண மனிதனுக்கும் அரசனுக்கும் சில அடிப் படையான வேறுபாடுகள் உண்டு. தனிமனிதன், தன் வளர்ச்சி, தன்னுடைய நலம், தன்னைச் சேர்ந்தவர்கள் நலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கொஞ்சங் கொஞ்சமாக வளர்ந்து, பரநலம் பேணுபவனாக ஆதல் வேண்டும். இவ்வாறு ஒரு தனிமனிதன் செய்தால் யாரும் அவனைத் தவறு கூற முன்வாரார். ஆனால், அதே மனிதன் அரசனாகப் பிறந்துவிட்டால், அவன் நிலையும் குறிக்கோளும், வாழ்வு முறையும் முற்றிலும் மாறுபட்டுவிடும். அரசனைப் பொறுத்தமட்டில் தான் என்பதற்கோ, தன்னலம் என்பதற்கோ, சிறிதும் இடம் இல்லை. தொடக்கத்திலிருந்தே அவன் பிறர்பொருட்டு வாழ்பவனாக அமைய வேண்டும். எனவே மக்களுக்காகவே வாழவேண்டிய கடப்பாடுடைய அம் மன்னன் மக்கள் நலத்திற்காகத் தன்னை எந்தப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறான் என்று காண்டல் வேண்டும். நாள் முழுவதும் அவனுடைய கவனம் குடிகளின் நலத்தைக் கவனிக்கவும், அவர்கட்கு வரும் தீமைகளிலிருந்து