பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 + கம்பன் - புதிய பார்வை இருந்துகொண்டு மக்களிடையே வாழும் ஒருவன், அதிலும் அதிகாரமும் செல்வமும் தன் கையில் வைத்திருக்கும் ஒருவன், இப் பண்பாட்டைப் பெற்றுவிட்டான் என்று கூறினால் அது அரிதினும் அரிதுதான். தசரதன் அரிதினும் அரிதான இச் செயலைச் செய்து குறிக்கோள் தன்மை பெற்ற மன்னனாக ஆயினான். அதன் பயனாகப் பரம்பொருள் மானிட வடிவு தாங்கி இம் மண்ணில் தோன்றுவதற்குக் கருவியாக இத்தகைய மன்னனை வரித்துக்கொண்டான் என்று கூறிவிடலாம். ஆனால் கம்பனுடைய நோக்கம் அதுவன்று. புலனடக்க அடிப்படையில் சமுதாயத்தை நிறுவிக் காட்டிய புலவன், மன்னனும் அவ்வாறே என்று காட்டினான். - மக்கள் பற்றிய கவலை உண்டா? 9ஆம் நூற்றாண்டுவரைத் தமிழக வரலாற்றில் காணப் பெற்ற அரசர்களைப் பற்றியும், அவர்கள் வாழ்வில் பெரும்பகுதி போரில் கழிந்ததையும் கம்பன் அறிந்தான். இந்த அரசர்கள் தம்முடைய அகங்காரத்தையும், அதற்கு இரை போடும் புகழையும் வளர்த்துக்கொள்ளவே போரிட்டனர். போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் இழந்தனர். போருக்குப் பின்னர் இறந்தவர்கட்குக் கல்நட்டு வழிபாடு முதலிய செய்யப் பெற்றாலும், இறந்தவனுடைய குடும்பம் என்ன ஆகும்? என்ற வினா யார் மனத்திலும் தோன்றியதாகத் தெரியவில்லை. முகவரி இல்லாத அந்த இறந்த வீரர்களின் குடும்பங்கள் எவ்வளவு அல்லல் உற்றிருக்கும்? என்றோ ஒருநாள் நடைபெறும் போர் என்றாற்கூடக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அடிக்கடி நிகழ்ந்த இப்போர்கள் குடிகட்குப் பெருந் துன்பத்தை விளைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இலக்கணம் கூறும் வெட்சி முதலிய