பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 131 நாட்டு மாந்தர் எல்லாம் தம்போர் நரர்கள் என்று கருதார் ஆட்டு மந்தையாம் என்று உலகை அரசர் எண்ணிவிட்டார் (பாஞ்சாலி சபதம்-இரண்டாம் பாகம்-16-20) ஏறத்தாழ இதே மனநிலைதான் அன்றைய அரசர் களிடமும் இருந்திருக்க வேண்டும். கள்ளும், ஊன் உணவும், பரத்தமையும் நிறைந்திருந்த காலம் அது. சாதாரண மக்களே இவற்றில் ஈடுபட்டனர். எனின், அதிகாரத்தில் உள்ளவர்களும், அரசர்களும் இவற்றில் மீதுர்ந்து சென்றிருப்பர் என்று கருதுவதில் தவறு இல்லை. இம் மூன்றிலும் ஈடுபட்டவர்களிடம் புலனடக்கம் என்ற ஒன்றை எதிர்பார்ப்பது முடியாத காரியம். புலனடக்கம் இல்லாத பொழுது ஆணவம், பகையுணர்ச்சி, அளவிறந்த தன்மான உணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி, சினம், அழுக்காறு என்பவை அவர்களிடம் குடிபுகுதல் எதிர்பார்க்கக் கூடியதேயாம். இவை புகுந்தவிகிதத்தில் அன்புடைமை, அருளுடைமை என்பவை எதிர்பார்க்கக் கூடியனவல்ல. எனவே, இத்தகைய மன்னர்கள் தம்மால் ஆளப்படும் மக்கள் பற்றிக் கவலைப்படாமல் தம் புகழ் வேட்டை யிலேயே காலங் கழித்திருப்பர் என்றும் ஊகிக்கலாம். இதனை மனத்துட் கொண்ட கம்பநாடன் தான் கண்ட குறிக்கோள் சமுதாயத்தில் வைக்கப் போகும் அரசனைப் புதிய முறையில் அமைக்க விரும்புகிறான். மன்னன் பற்றிய கருத்து அரசர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை இதுவரை கண்டோம். இனி அரசர்களைப் பற்றி இத் தமிழ் மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதையும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள புலவர்கள் என்ன நினைத்துப் பாடினார்கள் என்பதையும் ஓரளவு காண்டல் நலம்.