பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii அறிவுரைகள் தேவை என்பது புலப்படலாயிற்று. இக்கால கட்டத்தில் பாண்டியன் கடுங்கோன் உள்ளிட்ட மன்னர்கள் களப்பிரரை வெல்லத் தொடங்கினர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி இத் தமிழர்களின் பழைய விழுப்பொருள்களுக்கு (values) புத்துயிர் கொடுத்தனர். இந்தக் காலகட்டத்தில் தோன்றிய கம்பநாடன் இத் தமிழக வரலாறு, இலக்கியம், ஆகிய அனைத்தையும் கண்டு சிந்தித்த பிறகு, அன்றைய நிலையில் இத்தமிழர்கள் வீறுகொண்டு எழவேண்டும் எனின் கொள்ளத் தக்கன யாவை? தள்ளத் தக்கன யாவை? என்பவற்றைத் தெளிந்து கொண்டான். இவற்றை எவ்வாறு மக்களுக்கு அறிவுறுத்துவது? திருக்குறள் போன்ற மற்றொரு நீதிநூலை இயற்றினால் அதுவும் அது அடைந்த கதியைத்தான் அடையும். அறிஞர் பெருமக்கள் போற்றும் அளவுக்கு ஒரு நீதிநூலை இயற்றலாம். ஆனால் சாதாரணப் பொதுமக்களிடம் அது செலாவணி ஆகுமா? என்பன வினாவுக்குரிய ஒன்றாகும். மக்கள் மத்தியில் தான் கூறவந்த கருத்துகள் சென்று பரவ வேண்டுமாயின், அதற்குரிய ஒரே வழி அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நூலை, அவர்கள் விரும்பிக் கற்கும் ஒரு நூலைப் படைக்க வேண்டும். அவர்கள் சுவைக்கும்படி ஒரு நூலை இயற்றி, தான் விரும்பும் கருத்துகளை அதில் ஏற்றிவிட வேண்டும். இந்த முடிவுக்கு வந்த கம்பநாடன் இந்தப் பண்புகளுடன் கூடிய கதையைத் தேடி இருக்க வேண்டும். தொன்றுதொட்டு இத் தமிழ்நாட்டில் பலரிடமும் பயின்றுவந்த கதை இராமகாதை என்பதையும் அவன் கண்டுகொண்டான். சைனராகிய இளங்கோவடிகளையும் இக்கதை ஈர்த்தது என்றால் அதன் வலுவை அறிந்துகொண்ட கம்பநாடன் அக் கதையையே தன் கருத்து நிறைவேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொண்டான். கதை அனைவருக்கும் நன்கு தெரிந்த கதையானாலும் தன் குறிக்கோளை நிறைவேற்றும் முறையில் அதை அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். மூலக் கதையில்