பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கம்பன் - புதிய பார்வை தங்கள் மன்னன் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தசரதன் அதனைச் செய்ய ஒருநாளும் முற்படான். மடங்கல்' என்று கூறியதன் கருத்து இதுவேயாம். இந்த உவமையில் ஒரு பகுதியின் சிறப்பை அறிய முடிகிறது. மக்கள் உயிர் என்றும், மன்னன் உடம்பு என்றும் கூறிவிட்டமையின், உடம்பாகிய மன்னனிடத்து உயிர் களாகிய மக்கள் அன்பு பூண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. தன் உடம்பு, நோய் நொடி இல்லாமல் வலுவுடன் இருக்க வேண்டும் என்றுதானே எந்த உயிரும் விரும்பும்! எனவே, மக்கள் மன்னனிடம் கொண்ட ஈடுபாட்டை அறிய முடிகிறது. மன்னன் (உடம்பு), மக்களை (உயிர்) எவ்வாறு கருதினான்? எவ்வாறு நடத்தினான்? என்பதை அறிய வேண்டாவா? எனவே அதையும் அறிவிக்கும் முறையில் ஒர் உவமை கூறுகிறான் கவிஞன். வையகம் முழுவதும் வறிஞன் ஒம்பும் ஒர் செய் எனக் காத்து இனிது அரசு செய்கிறான். (அரசியல் படலம்-12) என்று கூறுகிறான். வறிஞனாக உள்ள ஒருவனிடம் ஒரு செய் (நிலம்) மட்டும் உள்ளது. அவன் உயிர் வாழ்வது அந்தச் செய் அளவு நிலத்தின் விளைவை நம்பித்தான் என்றால், எத்துணைக் கவனத்துடனும், கவலையுடனும் அந்த வறிஞன் அந்தச் செய் அளவு நிலத்தைப் பாதுகாத்துப் பராமரிப்பான் என்பது நன்கு விளங்கும். அதே போலத்தான், தசரதன், இந்த வையகம் முழுவதையும் காத்து இனிது அரசு செய்கின்றானாம். ஒரு செய்நிலத்தை வறிஞன் ஒம்புகிறான் என்பதில் கருத்தாழம் உள்ளது. நிலம் எங்கிருக்கிறது என்ற விவரமே தெரியாமல் பிறரைக் கொண்டு பயிரிட்டு வருமானத்தை வாரி இறைக்கும் ஜமீந்தார் வேறு; காலை மாலை இரு வேளைகளிலும் நிலத்தைச் சுற்றிச்சுற்றி வந்து பார்த்து, ஒரு செடியில் நோய் வந்தாலும், அதைக் கவனித்து மருந்து அடித்துக் களை எடுப்பதில் கவனம்