பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii வேண்டுமான திருப்பங்களைச் செய்துகொண்டான். தன்னுடைய காப்பியத்தில், முக்கியமாக அவன் ஏற்றிய குறிக்கோள் ‘புலனடக்கம்’ என்பதாகும். இந்தப் புலனடக்கம் இன்மை யால்தான், தமிழினம் களப்பிரர் காலத்தில் அடிபட்டது என்பதைக் கண்ட கவிஞன் இதற்கு முதல் இடம் கொடுத்ததில் வியப்பே இல்லை. முதல் பாட்டிலேயே பொறிகள் தம் எல்லைவிட்டுப் புறஞ்செலாத மக்கள் வாழும் நாடு’ என்று தொடங்கினான். காப்பியம் முழுவதிலும் புலனடக்கம் உடையவர்கள் மேன்மை, அஃதில்லாதவர்கள் தாழ்மை என்பவற்றைக் காட்டிக்கொண்டே சென்றதுடன், இப் புலனடக்கத்திற்காகவே அனுமன் என்ற பாத்திரத்தையும் படைத்துக் காட்டுகிறான். முதல் பாடலில் புலனடக்கம் பற்றித் தொடங்கிய கவிஞன் இறுதியாக இராவணன் இறந்ததைக் கூற வருகையிலும் சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய. மும்மடங்கு பொலிந்தன அவன் முகங்கள் என்று கூறி முடிக்கிறான். புலனடக்கம் இல்லாத இராவணன் கூட அப் பொறிபுலன்கள் செயலிழந்த பிறகு, மும்மடங்கு பொலிந்தான் என்று கூறிக் காப்பியத்தை முடிக்கின்றான். புலனடக்கத்தின் மொத்த உருவமாக அனுமனைப் படைத்துவிட்ட பிறகு, இராமனாகிய பரம்பொருளே, அனுமனுள் அடக்கம் என்பதையும் விடை கொடுத்த படலத்தில் கூறிக் காட்டுகிறான். . . புலனடக்கத்தை அடுத்துக் கவிஞன் செய்த புது முயற்சி பரம்பொருளை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தித் தொழிற்படச் செய்ததாகும். இம் முயற்சியை உலக காப்பியங்கள் பலவற்றுள்ளும் காணலாமேனும், கம்பன் கையாண்ட உத்தி இதுவரை யாரும் செய்யாத ஒன்றாகும். அவனுடைய காப்பியத்தில் பிற பாத்திரங்கள் இராமனைப் பரம்பொருள் என்று அறிந்திருப்பினும், இராமன் தன்னை ஒரு மனிதனாகவே கருதியும் பேசியும் நடந்துகொள்கிறான். அறத்தை