பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கடவுள் மனிதனாகப் பிறந்தால்? சமயப் பொறை குறைவு தமிழ் மொழியில் பெருங்காப்பியம் இயற்றிய கவிஞருள் கம்பன் ஒப்பற்று விளங்குகிறான் என்று காண்கிறோம். ஒப்பற்றவன் என்று கூறக் காரணம் உண்டு. ஏனைய கவிஞர்கள் காணாத காட்சிகள் பலவற்றைக் கண்டு, அன்றுவரை யாரும் நினைந்து பார்த்துக் கூறாத சிலபல கருத்துக்களின் அடிப்படையில் இவன் காப்பியம் அமைத்தான் என்பதே அக் காரணம். அப் புதிய காட்சிகளுள் இவன் கண்டு கூறிய கடவுட் கொள்கையும் ஒன்றாகும். இந் நாட்டில் தோன்றிய கவிஞர்கள் அனைவரும் கடவுட் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாம் என்றாலும், தாம் வழிபடும் கடவுளுக்கு ஒரு பெயரும் வடிவமும் தந்து, அதுவே முழுமுதற் பொருள் என்று கூறினர். சமய இலக்கியம் படைத்த நாயன்மார்களும் ஆழ்வார்களுங்கூட இதற்கு விலக்கில்லை. பரம்பொருள் நாமரூபம் கடந்தது என்பதைச் சிற்சில இடங்களில் இவர்கள் கூறாமல் இல்லை. என்றாலும் நாமரூபம் படைத்துக்கொண்டு, அதுவே பரம்பொருள் என்றே கூறினர். அதனால் சமயப்பொறை இல்லாமல், சமய வேற்றுமையும், பூசலும் தோன்றி வளரலாயின. சமய ஒருமைப்பாட்டைக் காணல் இந்த நிலையில், இந்நாட்டின் பழஞ் சமயங்களாகிய சைவம், வைணவம் என்ற இரண்டையும் இணைத்த ஒரு புதிய இணைப்புச் சமயத்தை ஏற்படுத்த முனைகிறான் கம்பநாடன். அடுத்தபடியாக இந்த இரண்டு சமயங்களுமே கடவுள் மானுட வடிவங்கொண்டு இந்த உலகிடை வந்து