பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 147 அடியார்கட்கு அருள் செய்வான் என்பதை ஏற்றுக்கொள் கின்றன. ஆனால் அவ்வாறு மானுடனாக வரும்பொழுது, தான் யார் என்பதை அறியாமல் வந்து பணி புரியுமாறு செய்த புதுமை கம்பனுடையது. கடவுளை அடையப் பல வழிகளைக் கூறும் இந்த இரண்டு சமயங்களும் பக்தி மார்க்கத்தை இன்றியமையாததாய்க் கூறும். கம்பன் இதை ஏற்றுக்கொண்டு, ஞான மார்க்கத்துக்கும் இடந் தந்து தன் சமயத்தைப் படைக்கின்றான். உபநிடதம் கூறும் பிரம்மத்தை மூலப் பரம்பொருள் என்று குறிப்பிடுகிறான். விசிட்டாத் வைதத்தையும் சற்தாரிய வாதத்தையும் (உள்ளது போகாது இல்லது வாராது) இறைவன், உயிர்கள், உலகம் என்பவற்றின் உண்மைகளையும் ஏற்றுக்கொள்கிறான். இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவன் மேற்கொள்ளும் கடவுட் கொள்கை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டியதாகும். இதன் விரிவை அடுத்த பகுதியில் காணலாம். "இராமனாகப் பிறந்தவன் திருமாலே" என்ற கொள்கை வான்மீகத்தில் முதலில் இல்லாமல் பிறகு சேர்க்கப்பட்டது என்பது இக்கால ஆராய்ச்சியாளர் கொள்கை. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சிலப்பதிகாரக் காலத்தி லேயே இக்கொள்கை இருந்து வந்ததை அறிய முடிகிறது. எனவே, கம்பநாடன் ஆயிரம் ஆண்டுகளாக இந் நாட்டில் ஊறிப்போன இக் கொள்கையை மாற்ற இயலவில்லை. அதனைத் தேவையான இடங்களில் குறிப்பிட்டுச் செல்வதுடன் சரி. அவன் தன் சொந்தக் கருத்தாகப் பேசும் போதெல்லாம் நாமரூபமற்ற பரம்பொருளையே பேசுகிறான். இத்தகைய நாமரூபங் கடந்த பரம்பொருள், மானிடனாக வந்து, பிறந்து, தொழிற்பட்டது ' என்பதை எல்லாச் சமயத்தாரும் ஒரே சமயத்திலுள்ள அனைத்துப் பிரிவினரும் ஏற்பர் என்று கூற முடியாது. இத்தகைய ஒர் இக்கட்டான நிலையைக் கம்பன் தனக்கே உரிய முறையில் ஈடுகொடுத்து அதில் வெற்றியும் காண்கிறான்.