பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 151 நீருக்கு வடிவோ உருவோ இல்லாமல் தனக்கென ஒரு குறிப்பிட்ட குணம் இல்லாமல் இருப்பதுபோல் மூலப் பரம்பொருள் நாமரூபம் கடந்ததாய், குணம் இல்லாததாய், அளவிடற்கரியதாய் இருக்கக் காண்கிறோம். ஆனால் அதே கடல்நீர் ஆவியாகச் சென்று வானிடை உலாவி, விரும்பும் பொழுது மழை என்ற பெயருடன் எல்லாவிடங்களிலும் பொழிகிறது. மழையாகப் பொழிவது அதே நீர்தான். ஆனால் மழை நீராகப் பொழியும் பொழுது அதன் இயல்புகள் மாறிவிடுகின்றன- அதாவது தனக்கென இயல்பு ஒன்றும் இன்மையின், அவ்வவ் இடத்திற்கு ஏற்ற இயல்பை மேற்கொள்கின்றது. அதேபோலப் பரம் பொருளும் பிரபஞ்சம், உலகம் என்ற படைப்புகளில் பல்வேறு இயல்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. அடுத்து, இதே ஆற்றுநீர், வயல், காடு, குளம், மதகு, சோலை முதலிய இடங்களில் புகுந்திருக்கும் பொழுது வயல், நீர், காட்டாற்று நீர், குளத்து நீர், மதகு நீர், சோலை நீர் எனப் பல்வேறு பெயர்களைப் பெறுகிறது என்றாலும், ஒரே ஆற்று நீர்தான் அது. அதேபோலப் பரம்பொருள் ஒன்றேயாயினும், ஒவ்வொரு சமயத்தாரும் வெவ்வேறு பெயர்களால் அந்த ஒரே பொருளை அழைக்கின்றனர். எனவே சமய வேறுபாடுகள் மனிதர்களாகச் செய்து கொண்டவை என்பதும், அச்சமயங்கள் வெவ்வேறு பெயர்களால் அழைத்தாலும், மூலப் பொருள் ஒன்றே என்பதும், பெறப்பட்டது. இந்த உண்மையால் பரம் பொருள் கட்புலனுக்கு வெளிப்பட்டு நின்று அண்ட பிண்ட சர அசரமாக விளங்கும் இயல்பு கூறப்பட்டது. தாதுகு சோலை தோறும் என்ற அடுத்த பாடலில் பரம்பொருள் நுண்மையாக (சூக்குமமாக) யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் நிலையைப் பேசுகிறான். பருப்பொருளாகக் காணப்பெறும் அனைத்தும் இறைவனே