பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv நிலைநிறுத்த வந்தவனாகவும், அறத்தின் மூர்த்தியாகவும், புலனடக்கத்தின் உருவமாகவும், சாதாரண மனிதர்கட்குரிய துயரம், இடர் என்பவற்றை உடையவனாகவும் காட்சி யளிக்கிறான் கம்பன் படைத்த இராமன். எதிர்பாரா நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு நம்முடைய பரிவுக்கும் ஆளாகிறான் மனிதனாக வந்த பரம்பொருள். உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக 'வாலியைக் கொல்வேன்' என்று சூளுரைத்துக் கொன்றும் விடுகிறான். இறக்கப் போகும் வாலியின் வார்த்தைகளைக் கேட்டுக் கழிவிரக்கங் கொண்டு அவன் மகனிடம் 'நீ இது பொறுத்தி என்று பேசும் மனிதனாகவும் காட்சியளிக்கிறான் கம்பன் கண்ட இராமன். உலக இலக்கியங்கள் பலவும், கடவுளர்களை இவ்வுலகில் வந்து தொழிற்படுமாறு செய்துள்ளன. ஆனால் ஒன்றாவது அம் முயற்சியில் வெற்றி பெற்றது என்று கூற முடியவில்லை. இதன் எதிராகக் கம்பநாடன் இம் முயற்சியை மேற்கொண்டு அதில் முழு வெற்றியும் பெற்றுவிடுகிறான். எனவே கம்பநாடன் சில குறிப்பிட்ட விழுப்பொருள்களை (Values) இத் தமிழ்ச் சாதிக்கு எடுத்துக்காட்டி அவர்களைத் திருத்துவதற்காகவே இக் காப்பியத்தைப் பாட எடுத்துக் கொண்டான் என்பதையும், சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தை விட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாக அவன் பேசுகிறான் என்பதையும், வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளைத் தமிழில் கூறிய முதற் புலவன் அவனே என்பதையும், இக் காப்பியத்தின் உயிர்நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே என்ப தையும் அறிய முடிந்தது. அதனாலேயே கம்பன்-புதிய பார்வை என்ற தலைப்பில் இந்நூல் வடிவு பெறுகிறது. இந்நூலை எழுத்து வடிவில் கொணரத் தூண்டுதல் அளித்தவர்கள், அமரர் ஏ.வி.எம். அறக்கட்டளையினராவர்.