பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 + கம்பன் - புதிய பார்வை அரன் அதிகன், உலகை ஒரடியால் அளந்த அரிதான் அதிகன் என்று பேசுபவர்களை அறிவில்லாதவர்கள் என்று கம்பன் கூறுகிறான். இத்தகைய அறிவிலிகள் மெய்ப் பொருள் யாது என்பதை அறிய முற்படமாட்டார்கள். எனவே இவர்கள் பரகதி சென்று அடைதலும் இயலாத காரியம் என்று பேசுகிறான். ஒரு கவிஞன் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்த முற்படும்போதுகூட, அவன் வாழும் காலச்சூழல் அவனை விட்டுவிடுவதில்லை. அந்தச் சூழலில் சிக்கிப் பலரும் மூழ்கிவிடுவர். கம்பன் போன்றோர் அந்தச் சூழலில் சிக்காமல் இருப்பதுடன், அதன் குறைவு நிறைவுகளை ஆராயும் ஆற்றலையும் பெறுகிறார்கள். இறை இயல்பைக் கூறும் நூல்கள் இறை இயல்பைக் கம்பன் அறிந்து விரிவாகக் கூறுதற்கு உதவியாக இருந்தவை ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களேயாகும். இவற்றுடன் உபநிடதக் கருத்துகளும் பெரிதும் உதவியுள்ளன. வான்மீகத்தில் இல்லாத இரணியன் வதை பற்றி ஒரு படலமே பாடியுள்ளான் கவிஞன். காப்பியப் போக்குக்கு இரணியன் வதைப்படலம் உதவுகிறதா என்று திறனாய்வாளன் நோக்கில் பார்க்கும்போது இல்லை என்றுதான் விடை கூற வேண்டியுள்ளது. இராவணன் மந்திராலோசனை அவையில், தன்னையும் மறந்து அவன் சினங் கொண்டுள்ள நிலையில் இவ்வளவு பெரிய வரலாற்றை 176 பாடல்களில் வீடணன் கூறவும், அதை அவன் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்தான் என்று கூறுவதும் பொருத்தமாக இல்லை. வான்மீகத்தில் இது இல்லை. அன்றியும் கதைப் போக்கிற்கு இது தடையாக உள்ளது என்பதைக் கம்பனைப் போன்ற தலையாய கவிஞன் அறியவில்லை என்று கூறுவதும் சரி இல்லை என்றால், ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.