பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 157 இறை இயல்பை, உபநிடத அடிப்படையில் தன் காப்பியத்துள் எவ்வாறாவது நுழைத்துவிட விரும்புகிறான் கம்பநாடன். இறை இயல்பை, உபநிடத உதவி கொண்டு சொல்வதற்குப் பரம்பொருள் மனிதனாக வந்துள்ள இராமகாதை பொருந்துமாறு இல்லை. மேலும், இறைவன் தன்னைப்பற்றித் தானே பேசிக்கொள்வதும் (மில்டனின் காப்பியத்தில் வருவது போல) தமிழர் கண்ட காப்பிய அமைதிக்குப் பொருந்துமாறு இல்லை. கவிஞன் தானே அதனைப்பற்றிப் பேசக் காப்பிய இலக்கணம் இடந் தராது. அப்படியானால் காப்பியத்துள் வரும் ஏதாவது ஒரு பாத்திரத்தைக் கூற முடியும். இறை இயல்பு பேசும் பாத்திரம் அதற்குரிய தகுதி பெற்றிருத்தல் வேண்டும். அன்றியும் தகுதி பெற்ற பாத்திரம் பேசுவது மட்டும் போதாது. அதனைக் கேட்கின்ற பாத்திரமும் அதற்குரிய தகுதியைப் பெற்றதாய் இருத்தல் வேண்டும். இத்தனை இடையூறுகளின் நடுவே நிற்கும் கம்பநாடன் இதற்கு ஒரு வழி காணும் முகமாகவே இரணியன் வதைப்படலம்' அமைக்கின்றான். அது காப்பியத்துடன் பொருந்தி நிற்கவில்லை என்ற குறை பேசப்பட்டாலும், அதன் பொருட்டுக் கவிஞன் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எப்படியும் தன் நோக்கம் நிறைவேற வேண்டும். காப்பியப் போக்கில், இராமனைப் பரம்பொருள் இறங்கி வந்ததாகச் சொல்ல வேண்டும். அப்படிக் கூற வரும்பொழுதே அதற்கேற்ற நிலைக்களம் பரம்பொருளின் இலக்கணம் பேச ஒரு பாத்திரம், அதனைக் கேட்க ஒரு பாத்திரம் ஆக அனைத்தும் அற்புதமாகப் படைக்கப்படுகின்றன. இறைவன் கருணையின் உறைவிடம் இவற்றை விரிவாகக் காண்பதற்கு முன்னர், இறை இயல்பை அறியும் அறிவை, அவன் படிப்படியாக வளர்த்துக்கொண்டே செல்வதையும் காண்டல் வேண்டும்.