பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 159 இருவரும் உரையாடியதை வான்மீகி கூறுவதைப் பார்த்தால், சாதாரண நண்பர்கள் இருவர் உரையாடிக் கொண்டிருப்பதைத்தான் நினைவூட்டும். வான்மீகியின்படி குகன் தூரத்தில் வருவதை அறிந்து இராம இலக்குவர்கள் எழுந்து நின்று அவனுக்கு மரியாதை செய்து உரையாடத் தொடங்குகின்றனர். . கம்பன் கண்ட குகன் வான்மீகியின் இந்தக் குகனை 'ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது என்று ஆழ்வார் பாடக் காரணமே இல்லை. தமிழகத்தில் குகனைப்பற்றிய வேறு வகையான வரலாறு இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. வான்மீகி கூறும் குகனைவிட ஆழ்வார் கூறும் குகன் கம்பனுக்கு ஏற்ற பாத்திரமாக அமைகின்றான். வெளியில் காவலாக நிற்கும் இலக்குவன் குகனைப் பார்த்து நீ யார்? என்று கேட்டவுடன், அவன்தான் இராமன் போலும் என்று நினைத்து, தேவா நின் கழல் சேவிக்க வந்தனன் நாவாய் வேட்டுவன் நாயடியேன் குகப் படலம்-1) என்று கூறுகிறான். அவனை வெளியில் நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்ற இலக்குவன், தமையனிடம் தாயினும் நல்லன் (12) வந்துள்ளான் என்று கூறவும் அவன் அனுமதி பெற்றுக் குகனை உள்ளே அழைத்துச் செல்கிறான் இலக்குவன். இராமனை முதன் முறையாகக் கண்ட உடனேயே, நின்னை இங்ங்ணம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான் (17) என்று கதறுகிறான் குகன். உடனே இவனிடம் அன்பு என்பது தனியே இல்லை; இவன் அன்பே வடிவானவன் என்ற முடிவுக்கு வந்த இராகவன், திராக் காதலன் ஆகுமன்றே (18) என்று இலக்குவனுக்கும் பிராட்டிக்கும் அறிவிக்கின்றான்.

  • அயோத்தியா காண்டம் - ஸர்க்கம் 50