பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 163 குகனைப் பார்த்தவுடன் இராமன் கூறிய சொற்கள் 'யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மோடு (18) என்பதாகும். இவ்வாறு இராமன் கூறுவதற்குக் குகன் என்ன செய்தான்? அவன் இருந்த நிலையைக் கம்பன் இதோ கூறுகிறான்; இழிபுனல் பொழி கண்ணான், ஆவியும் உலைகின்றான், அடியினை பிரிகல்லான் (27), (கண்ணில் நீர் பொழிய, உயிர் போவதே போல் துயருற்று, இராமனை விட்டுப் பிரிய விரும்பாதவனாக இருந்தானாம்) இந்த நிலையைக் குகன் அடைந்துவிட்ட பிறகு, இராமனுக்கு வேறு வழியே இல்லை. அடுத்தபடியாகக் குகனை என் உயிர் அனையாய்! என்றான். மேலும் தன் சோதரனையும், மனையாட்டியையும் குகனுக்குத் தம்பியாகவும், கொழுந்தியாகவும் ஆக்கினான். அடியவ னாகிய குகன் ஆணையின்படியே இராமனாகிய தான் ஆட்சி புரிவதாகவும் கூறினான் (42), இது ஏதோ உபசார வழக்கன்று என்பதை நிரூபிக்க, அடுத்து இங்கே உள்ள தான், தம்பி, மனைவி என்பவர்களுடன் காட்டும் உறவுடன் நிறுத்தாமல், அயோத்தியில் உள்ளவர்களையும் உளப்படுத்தி, முன்பு உளம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி நாம் ஒர் ஐவர்கள் உளர் ஆனோம் (43) என்று, முடிந்த நிலையில் தன்னையே அவனுக்கு ஈந்துவிடுகிறான். - அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார், அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார். அன்பே சிவம் ஆவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே. (திருமந்திரம்-270)