பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 167 அசைக்க முடியாத நம்பிக்கை கம்பனுக்கு இருந்தது என நினைக்க வேண்டியுளது. கம்பன் தான் கொண்ட இக் கருத்தைச் சுக்ரீவன் கூற்றாகப் பேசவைக்கின்றான், இராமனை முதன்முறையாகச் சந்திக்கும் சுக்ரீவன் மனத்தில் நினைப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. தேறினன்-அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே மாறி, இப் பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ, ஆறுகொள், சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே! (நட்புக்கோள் படலம்-19) (தேவர்கள் அனைவர்க்கும் தேவனான பரம் பொருளே, வடிவு மாறி மனிதனாக இங்குற்றான். சிவபிரான் நான்முகன் என்ற தொடக்கத்துத் தேவர்கள் தொகுதியை எல்லாம் மானுடம் வென்றுவிட்டது. இவன் மானுடனாக வந்தமையால்)) மாபெருஞ் செயல்கள் இவ்வுலகிடை நிகழ்ந்த பொழுதெல்லாம், இறைவன் மானுட வடிவுடன் வந்து செயற்கருஞ் செயல்களைச் செய்ததாகவே நம் நாட்டுப் பழங்கதைகள் பேசுகின்றன. இப் பழங்கருத்துக்குப் புதுமுடிவு கொடுப்பதற்காகவே கம்பநாடன் வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது என்று பேசுகின்றான். பரம்பொருளும் சட்டங்கட்கு உட்படும் பரம்பொருளே கூட மானுட உடல் தாங்கி வந்தால், மனிதனுக்குரிய சட்டதிட்டங்கட்கு உட்பட்டு நடப்பதே சிறந்தது என்று கம்பன் முடிவு செய்தான் என்று முன்னரே கூறப் பெற்றதல்லவா? அதனைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். மனிதனாகப் பிறந்தவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவனாக இருத்தல் வேண்டும். இக் கல்வியின் பயனாகப் புலனடக்கத்தை மேற்கொள்பவனாக