பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கம்பன் - புதிய பார்வை இருத்தல் வேண்டும். இது கைவந்துவிட்டால், விருப்பு வெறுப்புகட்கு இடங்கொடாத சம திருஷ்டி உடையவ னாக ஆதல் முடியும். இதனை அடுத்து ஆசை அறுப் பவனாக ஆதல் முடியும். இத்தகையவன் இல்லறத்தை மேற்கொண்டால், ஒரு மனைவியுடன் இல்லறம் என்னும் நல்லறம் நடத்துபவனாக ஆவான். இதன் விளைவாக அன்புடைமை, அருளுடைமை, அறன் உடைமை ஆகிய பண்புகள் அவனிடம் நிறைந்து காணப்பெறும். இவற்றின் பயனாக, அவன், தனக்கென வாழாப் பிறர்க்குரியவனாக' ஆதல் உறுதி. கம்பன் படைத்த இராமன் இந்த அடிப்படையை மனத்துள் வைத்துக்கொண்டே கம்பநாடன் காப்பிய நாயகனாகிய இராமனைப் படைக்கின்றான். திருமால் வந்து தோன்றினான் என்ற செய்தியைக் கம்பன் கூறினாலும், அவனுடைய இராமாயணத்தில் வரும் இராமன், அவனே படைத்துக் கொண்டவனாவன். கம்பன் கண்ட இராமன், வான்மீகி கண்ட இராமனினும் வேறுபட்டவன். ஆழ்வார்கள் கண்ட அவதார இராமனினும் வேறுபட்டவன். அவதாரக் கருத்தை மறுக்காமல், ஏற்றுக் கொண்டாலும், தான் கூறும் காப்பிய நாயகன் தன் படைப்பாகவே இருத்தல் வேண்டும் என்ற கொள்கையில் கவிஞன் ஊன்றி நிற்கின்றான். இக் கவிஞன் படைத்த இராமன் மனிதர்களுக்குள் ஈடு இணையற்றவனாக விளங்குகிறான், காப்பியத்தில் வரும் பல பாத்திரங்கள், இந்திரன், விராதன், வாலி, சரபங்கன், கருடன் முதலிய பலரும் அவனை அவதாரம் என்று கூறும்பொழுதுகூட அதனை ஏற்றுக் கொள்ளாமல், தான் என்ற நினைவுடனேயே கம்பராமன் உலா வருகின்றான். மனிதர்கள் இவ்வுலகிடைப் பிறந்துவிட்டால் அடைய வேண்டிய துயரங்கள், இராமனையும் பற்றுகின்றன.