பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 + கம்பன் - புதிய பார்வை பிறகு அவனுடைய பாதுகாவலில் இருப்பது நலம் என்று பஞ்சவடியில் தங்கினார்கள். அங்கேதான் இராவணன் சூழ்ச்சியால் பிராட்டி பிரிக்கப்பட்டாள். அவளைத் தேடி வந்துகொண்டிருக்கும் சோதரர்கள், வழியில் வீணைக் கொடி ஒடிந்து கிடப்பதைக் கண்டு, இராவணனுடைய கொடியை ஒடிக்கக்கூடியவன் சடாயுவே என்றறிந்து, மேலும் செல்கையில், தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவைக் கண்டனர். அவன் இறக்குந்தறுவாயில் இருப்பதைக் கண்ட இராமன், எல்லையற்ற சினத்துடன், இவ்வளவு கொடுமை நிகழ இடந் தந்த இவ்வுலகுதனையே அழிப்பேன் என்று பேசுகிறான். இதனைக் கேட்ட சடாயு, தான், இராமனுக்குப் பெரிய தந்தை என்ற உறவு முறையைப் பயன்படுத்தி, இராமனுடைய குற்றத்தை எடுத்துக்காட்டி இடித்து, அறவுரை கூறுகிறான். கொடி போன்ற பிராட்டி வனத்தில் தனியே இருக்கும்படி விட்டு விட்டு, மானைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறிக்கொண்டு அதன்பின்னே சென்று உங்கள் குலம் முழுவதற்கும் பழியைத் தேடிக்கொண்டீர்கள். அம்புடன் வில்லை ஏந்திய பிள்ளைகளே! ஆராய்ந்து பார்த்தால், இக்காரியத்தில் பிழை செய்தவர்கள் நீங்களே தவிர, உலகம் உங்கள்பால் என்ன பிழையைச் செய்தது? ஒன்றும் இல்லையே? என்ற பொருளில், . வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக, கொம்பு இழைமானின் பின்போய் குலப்பழி தேடிக் கொண்டீர்; அம்புஇழை விரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை, உம்பிழை என்ப தல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ? (சடாயு உயிர் நீத்த படலம்-124)