பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 + கம்பன் - புதிய பார்வை என்ற குறளில் வள்ளுவர் பேசுவது குறிக்கோள் தன்மை உடைய அன்பைப் பற்றியாகும். கைம்மாறு கருதாத அன்பு யாவரிடமும் இருப்பது அன்று. ஆனால், இந்தக் கைம்மாறு கருதாத அன்பின் முதிர்ந்த நிலைதான் அருள் எனப்படும். இதனையே வள்ளுவர் அருள் என்னும் அன்புஈன் குழவி (குறள் 75) என்று கூறுகிறார். இந்த அருளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது எந்தக் கைம்மாறும் எதிர்பார்ப்பதில்லை. எந்தத் தடையையும் பொருட்படுத்துவதில்லை. யாரிடம் அது பாய்கின்றதோ அவர்கள் அதனை அறியவேண்டும் என்றோ, அறிந்து நன்றி பாராட்ட வேண்டும் என்றோ, அருள் எதிர்பார்ப்பதில்லை. இதனால்தான் அருளுடையவர்கள் நல்லவர்-தியவர் நன்றி உடையவர்-இல்லாதவர், என்ற வேறுபாடு பாராட்டாமல், யாவருக்கும் தம் அருளை வாரி வாரி வழங்குகின்றனர். இராமன் அருள் நிறைந்தவன் என்பதற்குப் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைத்துக் காட்டுகிறான் கவிஞன். தேவியைப் பிரிந்து, திகைத்து, மனம் நொந்து தள்ளாடி வரும் நிலையில், சோதரர்கள் சபரியைக் காணுகின்றனர். அவள் கூறிய வழியின்படிதான் சுக்ரீவனைத் தேடிவரு கின்றனர். அனுமனைக் கண்டபிறகு சுக்ரீவனைக் காண்பது எளிதாகிறது. தாங்கள் எதிர்பார்த்து வந்தவன், வழியிலேயே கிடைத்தமையின் ஒரளவு மனம் அமைதி பெற்று ஆர்வத்துடன் வருகின்றனர். சுக்ரீவன்துணையை நாடித்தான் தேவியைத் தேடி முற்பட வேண்டும் என்ற நுணுக்கத்தை, தன் இழிபிறப்பை இராமனால் போக்கிக் கொண்ட கவந்தன்தான் கூறினான். அவனே சபரியைச் சந்தித்து அவள்மூலம் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு வழியறிந்து செல்லுமாறும் கூறினான். எனவே, சுக்ரீவனைக் கண்டவுடன் தன் துயரத்தின் பாரம் பாதி குறையும் என்று எதிர்பார்த்து வருகிறான்