பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 181 என்ற உயர்ந்த அறத்தின் அடிப்படையில், முன்பின் ஆராயாமல் இராமன் இவனை ஏற்றுக்கொண்டான் என்று கூறினால் அதனால் தவறில்லை. இராமன் சுக்ரீவனை அடைக்கலமாக ஏற்றுக்கொண்டதில் எவ்விதத் தவறும் கூற முடியாது. ஆனால் அடைக்கலம் தருவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பலபடிகள் மேலே சென்றுவிடுகிறான் இராமன். தன்னைத் தன் முன்னவனிடமிருந்து காக்க வேண்டும் என்றுதான் சுக்ரீவன் கூறினானே தவிர, வேறு எதையும் கேட்கவும் இல்லை; வேண்டவும் இல்லை. அவ்வாறு இருக்க, இராகவன் தானாகவே முன்வந்து ஆகாயத்தில், பூமியில் உன்னைக் கோபித்துப் பகைமை பூண்டார், என்னிடமும் பூண்டதாகவே கருதுவேன்; தீயவர்களாக இருப்பினும் உனக்கு வேண்டியவர்கள் எனக்கும் வேண்டியவர்களே என்ற முறையில் பேசுவது புதுமை ஆகவே உளது. நடுநிலைமை மறந்து இராகவன் இவ்வாறு பேசக் காரணம் யாது என்று சிந்திக்க வேண்டும். அவனுடைய இரக்க குணம், அருளுடன் சேர்ந்தவுடன் அவன் மனத்தை முற்றிலும் கரைத்துவிட்டது. அதிலும் எதிரே நிற்பவன் அடைக்கலம். உயிருக்கு அஞ்சுகிறேன் என்றவுடன், முழுவதுமாக இராகவன் மனங்கரைந்து விடுகிறான். எனவே, அவனுடைய அருளுக்கு, எதிரில் நிற்பவன் தகுதியானவனா என்ற வினாத் தோன்ற இடமே இல்லை. அருளுடையவர்கள் செயலைச் சாதாரணப் பகுத்தறிவு கொண்டு ஆராய முற்படுவது சரியன்று. பாரி முல்லைக் கொடிக்குத் தேரை ஈந்தது பகுத்தறிவு அற்ற செயல்தான். ஆனால் அறிவை இழந்து, அருளால் நிறைந்து, ஒன்றைச் செய்தமையால் உலகம் போற்றும் வள்ளலா னான். இராமன் செய்கையும் அவ்வாறே. எனவே இதனை அறிவின் துணைகொண்டு ஆய்வது சரியன்று.