பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 - கம்பன் - புதிய பார்வை முன்னவன் செய்தான் என்பதால் பின்னவன் அதனைச் செய்யலாம் என்று கூறல் முடியாது. அவனவனுக்கு ஏற்ற முறையில் முடிவு செய்யப்பட வேண்டியது இது. உதாரணத்திற்கு ஒன்றைக் காணலாம். இராமனையும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு வேள்வி செய்ய வருகிறான் விசுவாமித்திரன். அரக்கர்களை அழித்து, வேள்வி தடைபடாமல் நடைபெறுவதற்கு உதவத்தான் தசரத புத்திரர்கள் வருகின்றனர். குறிக்கோளும் அரக்கர்களை அழிப்பதுதான். ஆனால், முதன்முதலில் எதிர்ப்படுபவள் தாடகை. இவள் அரக்கிதான். ஒப்பந்த முறையில் அரக்கர்களை அழிப்பது கடமை என்றுதான் இராமன் வருகிறான். ஆனால் பெண்ணைக் கொல்ல அவன் பண்பாடு இடந்தரவில்லை. விசுவாமித்திரன் அவளைக் கொல்ல வேண்டும் என்று விரும்புகிறான். அறநூல் விதியைக் கடைப்பிடிப்பதனால் பெண்ணைக் கொல்லக் கூடாது. அரக்கியே எனினும் பெண் பெண்தானே! எனவே, இராமன் தருமசங்கடமான சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான். விசுவாமித்திரன் இப்பொழுது இராமனுக்குத் தந்தையாகவும், குருவாகவும், அறநெறி கூறுபவனாகவும் இருக்கின்றான். இராமன் இளையவன், அவனை வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமையை விசுவாமித்திரன் ஏற்றுக்கொண் டுள்ளான். விசுவாமித்திரனிடம் இராமன் தானாக வந்து சேரவில்லை. வசிட்டன், தசரதன் என்ற இருவருமே சோதரர் களை விசுவாமித்திரனிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களை முனிவனிடம் அனுப்பும்பொழுது, தசரதன் கூறிய சொற்கள், முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, நல் தந்தை நீ தனித் தாயும் நீ, இவர்க்கு எந்தை! தந்தனன், இயைந்த செய்க - (கையடைப்படலம்-8) என்பவையாகும்.