பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 197 விந்தையல்லவா? இதற்குப் பதிலாக வாலிபால் நட்புக் கொண்டால் போர் இல்லாமலே சீதையை மீட்டிருக்கலாமே! அப்படி இருக்கக் கவந்தன் ஏன் சுக்ரீவனை நாடச் சொல்கிறான். இராமன் பரம்பொருளாயினும், மனிதனாக வந்து மனிதர்கட்குரிய தொல்லைகளை அனுபவிக்கின்றான் என்றாலும், அறம் திறம்புதல் ஆகாதே! இராமன், தன் மனைவியை யார் திருடிச் சென்றானோ அவனைத் தண்டிக்கப் போகிறான். பிறன்மனை நயந்த குற்றத்துக்காக ஒருவனைத் தண்டிக்கப்போகும் மனிதன், தம்பியின் மனைவியை வைத்துக்கொண்டிருக்கும் வாலியின் துணையை எப்படி நாட முடியும்? வாலியிடம் இராமன் சென்றிருந்தாலும், அவனிடம் முன்பின் தெரியாமல் நட்புக் கொண்டிருந்தாலும், உண்மை தெரிந்தபிறகு அவன் உதவி எத்துணைச் சிறந்ததாக இருப்பினும் உறுதியாக வாலியின் உதவியை நாடமாட்டான். எப்படியாவது தன் காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற அற்பத்தனமான எண்ணம் உடையவன் அல்லனே! காரியம் வெற்றி பெறுவதானால் சரி எந்த வழியை மேற்கொண்டால் என்ன? என்று கருதுபவன் அல்லனே இராமன்! பயனைப் போலவே வழியும் தூய்மையானதாக இருத்தல் வேண்டும் என்று கருதுபவன் ஆயிற்றே! எனவேதான், வலி குன்றியவனாயினும் நேர்மை உடையவனைத்துணைக்கோடல் வேண்டும் என்ற கருத்தில், சுக்கிரீவனிடம் போகுமாறு கவந்தன் பணிக்கிறான். வாலியும் இராவணனும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் துணை வர வேண்டிய கடப்பாடு உடையவர்கள். எனவே, இராவணனைக் கொல்வதற்கு முன்னர் வாலியைக் கொல்வதற்காகவே இவ்வாறு கூறினான் என்று பேசும் வான்மீகியின் கொள்கையையும், அது அவதார நோக்கம் நிறைவேற இன்றியமையாதது வேண்டப்படுவது என்றெல்லாம் எழும் வாதங்களையும் கம்பன் சட்டை செய்யவில்லை.