பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 201 நம்பிய நம்பிக்கையில் விளைந்த சொற்கள். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன..!" (புறம்-192) என்ற பழம் பாடலை உள்ளவாறு அறிந்து அதன்படி நடக்கிறவன் இராமன். என்றாலும் என்ன? தந்தை கைகேயியைத் துறந்துவிட்ட பிறகு, அவளைத் தாய் என்று, அந்தத் தந்தையின் எதிரிலேயே கூறுவது தசரதனை அவமானப்படுத்துவது போலாகும். தந்தை சொல்லைக் காக்கும் தனயனான இராமன், ஒருநாளும் இதனைச் செய்ய உடன்படான். தந்தை, இறந்தபின்னரும், விடாமல் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி தவறானது என்பதால், அவன் மனத்தை மாற்றவும் வேண்டும். எவ்வாறு இதனைச் செய்வது? மிக அற்புதமான வழி ஒன்றை இராகவன் கையாள் கிறான். கைகேயியை மனைவி என்று கூற விரும்பாத தசரதன், அவள் பெயரைக் கூறவும் பிடிக்காமல், கேகயன் மகள் என்று கூறிவிட்டான். இராமன் இப்பொழுது அவளை எவ்வாறு கூறுவது? 'தாய் என்ற சொல்லைத் தவிர வேறு எந்தச் சொல்லைக் கூறினாலும், அது தாய்க்குச் செய்த பெருங் குற்றமாகும். அந்தச் சொல்லைப் பயன்படுத்தினால், தந்தைக்கு அவமானம் செய்ததாக அமையும். அதே நேரத்தில் இதை விட்டுவிடவும் முடியாது. எனவே ஞானியான இராகவன், தீயள் என்று நான் அவளை ஒருக்காலும் நினைத்ததில்லை என்ற குறிப்பையும் உள்ளடக்கி, தீயள் என்று கருதி நீ துறந்த என் தெய்வம் என்று கூறுகிறான். தாய் என்று-தான் தசரதன் எதிரே கூறக்கூடாதே தவிர, தெய்வம் என்று கூறினால் யார்தான் அதற்கு மறுப்புக் கூற முடியும்? அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று கூறுவது பொருத்தமே! அன்றி, வேறு யாராக இருப்பினும் ஒருவரைத் தெய்வம் என்று கூறுவதில் தவறு இல்லை. அடுத்துப் பரதனைக் குறிக்க வேண்டிய இடத்தில்