பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 203 நடந்துகொள்ளும் இராமனைப் படைத்தான். வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வெல்ல வேண்டுமானால், அந்த மானுடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, அற்புதமாகக் கவிஞன் எடுத்துக் காட்டுகிறான். புலனடக்கம் ஒன்றுதான் மனிதனைத் தேவனாக ஆக்கும். எனவே, அத்துறையில் தலை நின்றவனாக உள்ளான் மனிதனாக வந்த கடவுள்! புலனடக்கம் பெற்றவனுடைய தன்னலமின்மை, பிறர் நலம் பேணல், அன்புடைமை, அருள் உடைமை முதலிய நற்பண்புகள் அனைத்தும், அந்த அடக்கத்தின் பின் தாமே வந்துவிடுகின்றன. பரம்பொருளை மனிதனாக்கிய கம்பன், அந்த மனிதனை அறத்தின் மூர்த்தியாய், அருள் நிறைந்தவனாய், பிறர்நலம் பேணுபவனாய்ப் படைத்ததுடன், சாதாரண மனிதனுக்குரிய பண்புகளுடன் மிளிருமாறு செய்தது ஒப்பற்ற படைப்பாகும். உலகின் பல்வேறு மொழிகளுள் தோன்றியுள்ள பல்வேறு காப்பியங்களை ஒப்புநோக்கிப் பார்த்தால் சரி இல்லை என இந்நாளில் திறனாய்வாளர் சிலர் கருதுகின்றனர் என்றாலும், இவர்களிடையே காணப்படும் ஒருமைப் பாட்டை ஆய்வதில் தவறு இல்லை. ஹோமரில் தொடங்கி மில்டன் வரை, தோன்றிய கிரேக்க, இலத்தீன், இத்தாலிய, ஆங்கில மொழிக் காப்பியங்கள் ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டால், கம்பன் செய்துள்ள சாதனைக்கு இணை வேறு காணல் இயலாது. கடவுளை இந்த உலகில் நடமாடவிட்ட காப்பியக் கவிஞர் யாரும், அம் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இவர்கள் வெற்றி பெறாமல் போனது ஒருபுறம் இருக்க, இவர்கள் முயற்சியில் கடவுள் காயப்படுத்தப்பட்டுவிடுகிறார். இத்தகைய சூழ்நிலையில், எந்தக் காப்பியமும் அடைய முடியாத வெற்றியைக் கம்பநாடன் பெற்றுவிடுகிறான் என்பதைக் காண முடிகிறது.