பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கம்பன் கண்ட பரம்பொருள் மும்மூர்த்திகள் கொள்கை தன் காப்பியத் தலைவனாகிய இராமனைப் பரம் பொருளாகவே கம்பன் கருதிப் படைத்துள்ளான் என்று கூறப்பெற்றதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். அவன் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி இருந்த சைவ' வைணவப் போராட்டங்களைக் கண்டு எள்ளி நகை யாடினான் அவன். மும்மூர்த்திகள் கொள்கை இந்நாட்டில் வேரூன்றிவிட்ட ஒன்றாகும். இந்த மும்மூர்த்திகளுள், படைத்தல் தொழிலைச் செய்பவன் நான்முகன் என்றும், காத்தல் தொழிலைச் செய்பவன் திருமால் என்றும், அழித்தல் தொழிலைச் செய்பவன் உருத்திரன் என்றும் கூறி வந்தனர். நான்முகனை நம்பித் தனியே வழிபடு பவர்கள் எவரும் இல்லாமற் போகவே, போராட்டம் சைவ வைணவர்களுக்குள் மிகுந்து நின்றது. இத்தகைய சூழ்நிலையில், வான்மீகத்தில் பல மாறுதல்களைச் செய்தாலும், திருமாலே இராமனாகப் பிறந்தான் என்ற நம்பிக்கை வலுவாகப் பரவவிட்ட காரணத்தால், இராமன் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, திருமால் இராமனாகத் தோன்றினான் என்று கூறி விட்டான். ஆனால் தான் திருமால் என்று குறிப்பிடுவது, இந்த மும்மூர்த்திகளுள் ஒருவரையன்று என்பதையும், சமயம் நேரும்போதெல்லாம் விளக்கிக் கொண்டே செல்கிறான்.