பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 + கம்பன் - புதிய பார்வை வழியிலோ அன்றிப் பிற செல்வம் அதிகாரம் முதலியவற்றின் வளர்ச்சியிலோ வராது என்பதை எடுத்துக் காட்டினான். இத்தகைய ஒர் ஒப்பற்ற சமுதாயம் படைத்துக் காட்டின பிறகு ஆன்மிக வளர்ச்சி பற்றியும் பேச முடிவு செய்தான். வள்ளுவன் அடிச்சுவட்டில் அவன் முடிவுக்கு உதவி செய்யும் வகையில், அவன் எடுத்துக்கொண்ட கதையும் அமைந்தது. அவனுடைய காலத்தில் பக்தி என்ற பெயரில் சமயப் பூசல்கள் நிறைந்திருந்தன. பரம்பொருள் என்றால் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? பெயரும் வடிவும் இல்லாத பரம் பொருளுக்கு, அவரவர் விரும்பிய பெயரைக் கொடுத்துவிட்டு ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நினைத்த கவிஞன், கொஞ்சங் கொஞ்சமாகக் கடவுள் கொள்கையையும் பரப்ப முடிவு செய்தான். அவன் கதை யின் நாயகன் திருமால் அவதாரம் என்ற கொள்கை வலுப்பெற்றிருந்த அந்த நாளிலேயே கூட, அதனை மென்மையாக மறுத்துப் பரம்பொருளே இவ்வாறு வந்தது என்ற கொள்கையை வளர்த்தான், காப்பியத்தின் முதற் செய்யுளாகிய கடவுள் வாழ்த்துப் பாடலையே சமரச நோக்குடனும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைத்தான். இந்த அளவிற்கு அவன் துணிவு கொண்டு. புது வழி வகுக்க அவனுக்கு முன்னோடியாக இருந்தவர் வள்ளுவப் பேராசான். அப் பெருமகன் தான் பெயர் கூறாமல் பரம்பொருள் இலக்கணத்தை முதன்முதலில் வகுத்துக் காட்டினார். அடுத்தபடியாகப் புலனடக்கத்தால் மகாத்மாக்களாகிய சான்றோர்களைப் பற்றியும் கூறிய பெருமை அப் பெருமகனார்க்கே உரியது. அதை அப்படியே அடியொற்றிக் கம்பநாடன் இரண்டாவது பாடலில் சிற்குணத்தார் என்று தொடங்கிப் பெரியோர் பெருமையைக் கூறினான். இந்த நிலைக்களத்தை அமைத்துக்கொண்டபின்,