பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 209 தத்துவ அடிப்படையில் பரம்பொருள் பற்றிய இலக் கணத்தைக் கூற முடிவு செய்தான். அதனை உள்ளவாறு தெரிந்துகொள்ள வேண்டுமானால், நாமரூபம் கற்பிக்கப்பட்ட மும்மூர்த்திகளில் யார் பெரியவர் என்ற பைத்தியக்காரத்தன மான ஆராய்ச்சி மயக்கிலிருந்து விடுபட வேண்டும். அவ்வாறு பேசும் மனிதர்களை அறிவிலிகள் என்று ஏசுகிறான் கவிஞன். காப்பிய இலக்கணம் இனி அவன் கண்ட கடவுள் கொள்கையைப் பற்றிச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். ஒரு காப்பியப் புலவன் இரண்டு முறைகளில் தன் கருத்துக்கு வடிவு கொடுக்க முடியும். முதலாவது, தானே வெளிப்பட்டுத் தன் கொள்கையைப் பேசுவது; இரண்டாவது, காப்பியத்தில் தோன்றும் பாத்திரங்களின் மூலம் தன் கருத்தை வெளிப்படுத்துவது. இவற்றுள் முதல்வகை அத்துணைச் சிறப்புடையதன்று. காப்பிய ஒட்டத்தைத் தடை செய்யும் வகையில் இடைப் பிறவரலாகக் கவிஞன் பேசுவது அத்துணைச் சிறப்புடையதன்று. மாபெருங் கவிஞனாகவும் காப்பியப் புலவனாகவும் உள்ள கம்பநாடன், இதனை அறியாமல் இருப்பானா? எனவே, தன் கருத்தை வெளியிட ஒரு புது உத்தியைக் கையாள்கிறான். ஒவ்வொரு காண்டத்தின் முதலிலும், கடவுள் வாழ்த்து என்ற முறையில் ஒரு பாடலைப் பெய்கிறான். அவற்றில் அவன் கருத்தைப் பேசப் பொருத்தம் அமைந்துவிடுகிறது. காப்பியத்தினுள் உவமை வரும் இடங்களில் கவிஞன் தன் கருத்தை வெளியிடும் முறையில் உவமை அமைப்பது, அவனுடைய நுண்மான் நுழைபுலத்தைப் பொறுத்தது. புதியதைப் புகுத்தல் ஏன்? தன் காப்பியத்தின் உயிர்நாடியான பகுதி, கடவுட் கொள்கையை நிலைநாட்டுவதாகும் என்பதை அவன்