பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 221 இதே கருத்தைத் திருஞானசம்பந்தர், குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆல வாயினாய்! (திருமுறை 3-52-3) என்று பாடுகிறார். குற்றம்-குணம், பகை-நட்பு என்ற முரண்பட்டவை இரட்டைகள்) அனைத்தும் அவனே என்று கூறிவிட்டமையின், இராவணனையும், இரணி யனையும் மறக்கருணை காட்டித் தண்டித்துத் தன்னிடம் சேர்த்துக் கொள்கிறான் இறைவன். இராமன் மூவரும் அல்லன் இறைத்தத்துவம் பற்றி இன்னுஞ் சில நுண்மையான கருத்துக்களையும் பேச விழையும் கம்பன், அதற்கென்று ஒரு களம் அமைத்துக் கொள்கிறான். பிராட்டியைத் தேடிச் சென்ற அனுமன், இந்திரசித்தனால் பிடிபட்டு, இராவணன் எதிரே செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. தன் எதிரில் இருக்கும் அனுமனை நோக்கி இராவணன், நீ யார்? இங்கு வந்த காரணம் என்ன? (பிணிவீட்டு படலம்-73 என்று வினவுகிறான். அத்துடன் நிறுத்தாமல், இராவணன் தன் கல்வி அறிவைப் பயன் படுத்தி ஒன்று கூறுகிறான். தன் வரபலமும் இலங்கையின் காப்பும் நன்கு அறிந்த இராவணன், நேமியோ? குலிசியோ? நெடுங் கணிச்சியோ தாமரைக் கிழவனோ? தறுகண் பல்தலைப் பூமி தாங்கு ஒருவனோ?....................... (பிணிவீட்டு படலம்-70) (நேமி-சக்கரப்படையுடைய திருமால்; குலிசிவச்சிராயுதமுடைய இந்திரன்; கணிச்சி-மழுப்படை தாங்கும் சிவன்; தாமரைக் கிழவன்-நான்முகன்; பூமி தாங்கு ஒருவன்-ஆதிசேடன்.)