பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 அ. ச. ஞானசம்பந்தன் + 225 உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஞான விசாரணை, கேள்வி ஞானம், மாதவம் என்பவற்றை ஏன் மேற்கொள் கின்றன? அவற்றின் முடிவில் சத்திய, நித்தியப் பொருளைக் காணவேண்டும் என்ற பயன் கருதித்தானே இவை மேற்கொள்ளப்படுகின்றன? எனவே ஞானம், கேள்வி, தவம் என்பவற்றின் முடிவான பயன் சத்ய தரிசனந்தான். அந்தத் தரிசனம் கைகூடுவதும், கூடாமற் போவதும், மெய் அறமூர்த்தி ஆகிய பரம்பொருளைப் பொறுத்ததாகும். அவன் என்ன என்ன நினைக்கிறானோ அதே பயனை அவை பெறும். எனவே, பரஞானத்தின் பயனாகவும், கேள்வி ஞானத்தின் பயனாகவும், தவத்தின் பயனாகவும் உள்ளான் ஒருவன் என்று கூறுவதன் மூலம், அவனே பரம்பொருள் என்பதை நிலைநாட்டுகிறான் கவிஞன். இவ்வாறு அவன் கூறும் இடங்களில் எல்லாம் மும்மூர்த்திகளின் வேறுபட் டவனாகவே அம் மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான். இதற்குத் தக்க காரணமும் உண்டு. மேலே கூறிய இறை இலக்கணத்தை ஒரளவு அறிந்துகொண்ட பிறகு, படைத்தலை மட்டும் செய்பவனையோ, காத்தலை மட்டுஞ் செய்பவ னையோ, அழித்தலை மட்டுஞ் செய்பவனையோ எவ்வாறு மூலம் என்று கூற முடியும்? எனவே சைவ, வைணவப் போராட்டத்தைக் கடந்தவனாகவே கவிஞன் காட்சி நல்குகிறான். ஒரு சில இடங்களில் திருமால் செய்த செயல்களை, இராமன் அவதாரத்திற்கு முற்பட்ட நிலையில் செய்ததாகவும் கூறுகிறான். சைவர்களைப் பொறுத்த மட்டில் ருத்திரன், சதாசிவன், மகேஸ்வரன், என்றெல்லாம், செய்யுஞ் செயல் குறித்துப் பெயரிட்டதுபோல், வைணவர்கள் வெவ்வேறு பெயர்களை இடாமல், எல்லாவற்றையும் நாராயணன் என்றே கூறிவிட்டமையின், மும்மூர்த்திகளில் ஒருவராக உள்ள திருமால் என்ற பெயரையே கடந்து நிற்கும் பொருளுக்கும் பெயராகக் கவிஞன் பயன்படுத்துகிறான்