பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 7 வான்மீகத்தில் இல்லாத பல நிகழ்ச்சிகள் இராமகாதையில் மக்கள் மத்தியில் வழங்கின என்பதற்கு இவை இரண்டும் எடுத்துக்காட்டுகளாகும். அதே நேரத்தில் இராமனைப் பற்றிய கதைகள் சங்ககால மக்களிடம் மிகுதியாகப் பயின்றன. என அறியலாம். இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இராமன் கதை பரவியிருந்ததுடன் கீழ்த்திசை நாடுகளிலும் பரவியிருந்ததாக அறிகிறோம். சங்கப் பாடல்களின் அமைப்பு முறை இன்னும் அதிகமான அளவில் இராம காதையைப் பயன்படுத்த இடம் அளிக்கவில்லை. . பின் இலக்கியக் குறிப்புகள் சங்கப் பாடல்களை அடுத்து வந்த இலக்கியங்களில் இக்குறை நீக்கப் பெற்றதையும் அறிய முடிகிறது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று துணியப் பெறும் சிலப்பதிகாரம், இராமகாதையின் மிக இன்றியமையாத இரண்டு நிகழ்ச்சிகளை ஒரளவு விரிவாகவே கூறுகிறது என்பதையும் அறிகிறோம். இராமன் தன் தந்தையாகிய தசரதன் ஆணையின் பேரிலேயே மனைவியுடன் காடு சென்றான். அக்காடுறை வாழ்க்கையில் மனைவியை இழந்து பெருந்துயர் உழந்தான் என்ற செய்தி ஒன்று. இதனைச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அவ்வாறு கூறும்பொழுது முதனூலாகிய வான்மீகத்திற்கு மாறுபட்டு, இராமன் திருமாலின் அவதாரம் என்ற கருத்தையும் கூறுகிறது. தாதை ஏவலின் மாதுடன் போகிக் . காதலி நீங்கக் கடும்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடுமொழி அன்றோ? (ஊர்காண்-46-49) (தாதை-தசரதன், மாது-சீதை, வேத முதல்வன் நான்முகன்; பயந்தோன்-அவனை நாபிக் கமலத்தில் பெற்ற திருமால், நெடுமொழி பழங்கதை) .به