பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 247 வெறி ஒன்றே போதும் அல்லவா ? எனவேதான் புலனடக்கம் இல்லாத கயவரைக் குறிக்கத் தேவர்களைக் குறிப்பிடுகின்றான் வள்ளுவன். . புலனடக்கத்தின் சிறப்பையும், பழைய தமிழ் மரபின் உயிர்நாடியான அறம், கற்பு, என்பவற்றின் சிறப்பையும் விரிவாகப் பேச, இராம காதை இடந் தந்தமையின் அக்கதையை எடுத்துக்கொண்டான் கவிஞன். அதன் இடையே தான் கண்ட கடவுட் கொள்கையை விரித்துப் பேச, ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டான். தமிழ் மக்கட்கு இயல்பாக இருந்த கவிதை உணர்வைத் துண்டிவிட்டு, அற்புதமான கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பை நல்கினான். அடுத்தபடியாக, அந்த இனத்திற்கு இருந்த குறைபாட்டை, இலைமறை காயாக, எடுத்துக் கூறி அவர்களைத் திருத்த முயன்றான். ஆழ்வார்களும், நாயன்மார்களும் வைணவம், சைவம் என்ற வட்டத் துக்குள் நின்று பக்திப் பயிரை வளர்த்தனர். அவர்கள் காலத்தில் அது தேவைப்பட்டது. ஆனால் கம்பன் காலத்தில், சமய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, நாம ரூபங் கடந்த பரம்பொருளைப் பற்றிக் கூற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே இராமன் மும்மூர்த்திகட்கும் மேம்பட்ட பரம்பொருளே என்பதை நிறுவினான். இராம காதையில் ஈடுபட்டவர்கள், கவிதைச் சிறப்பில் ஈடுபட்ட வர்கள், ஒப்பற்ற காப்பியம் என்பதற்காக ஈடுபட்டவர்கள் என்று இப்படிப் பல தரத்தவர்களும் அவனுடைய இராமாயணத்தைப் படிப்பர். நாளடைவில் அவன் அக்காப்பியத்துள் பொதிந்து வைத்துள்ள அறமும், நீதியும் மெள்ளமெள்ள மக்கள் மனத்துட் பதியும், அதன் பயனாக இத்தமிழச்சாதி உயர்ந்து முன்னேறும் என்று கம்பன் கண்ட கனவே, இக்காப்பியத்தை அவன் இயற்றக் காரண மாய் அமைந்தது எனலாம்.