பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 251 - கூறவேண்டுமாயின் இராமகாதை முழுவதிலும் ஊடுருவி நிற்கும் காப்பிய நாயகனாகிய இராமனுக்குக்கூட, இத்துணை அடைமொழிகள் இல. எதிர்த் தலைவனாகிய இராவண னுக்கும் இத்துணை அடைமொழிகள் இல. கிட்கிந்தை, சுந்தரம், யுத்தம் என்ற மூன்றே காண்டங்களில் மட்டுமே வருகின்ற அனுமனுக்கு இத்துணைச் சிறப்பைத் தருகிறான் என்றால், அதற்கேற்ற காரணமும் உள்ளது. இராமனாக இருப்பவன் தசரதன் புதல்வன்; அறத்தின் மூர்த்தி; கருணை வள்ளல், என்ற முறையில்தான் பெரும் பாலான பாத்திரங்கள் அவனை அறிகின்றன. வசிட்டன், விசுவாமித்திரன், முனிவர்கள் என்பவர்கள் தம் தவ வன்மையால், இராமன் யார் என்பதை அறிந்துள்ளனர். விராதன், கவந்தன் போன்றவர்கள், தங்கள் இழிபிறப்பு நீங்கித் தேவவடிவம் பெற்றவுடன் இராமன் உண்மையில் யார் என்பதை அறிந்து பேசுகின்றனர். இந்தக் கூட்டங்களின், இடையே தன் கல்வி, கேள்வி, அறிவு, பரஞானம் அபரஞானம் என்பவற்றுடன் ஈடு இணையற்ற புலனடக்கம் என்பதையும் துணையாகக் கொண்டு, பிறர் யாரும் இவன் இன்னான் என்று அறிமுகம் செய்து வைக்காத நிலையிலும், இராமன் உண்மையில் யார் என்பதைக் கண்டுகொண்டவன் அனுமான் ஒருவனே ஆவான். இராமன் வந்து தோன்றிய இராவணனை அழிப்பது என்ற ஒரே காரியத்துக்காகத்தானே. இதனை இந்நாட்டவர் அவதார நோக்கம் என்று கூறுவர். அவதார நோக்கம் நிறைவேற இந்த அவதார நோக்கம் நிறைவேற எத்தனையோ பேர் உதவி புரிந்துள்ளனர். பலர் தெரியாமலும், சிலர் தெரிந்தும் உதவியுள்ளனர். கைகேயி, சூர்ப்பனகை போன்றவர்கள் தம் செயலின் பயன் என்னவாகும் என்று தெரியாமலே உதவி புரிந்துள்ளனர். விசுவாமித்திரன், கவந்தன் போன்றோர் அவதார நோக்கம் தெரிந்தே