பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 + கம்பன் - புதிய பார்வை திருமால் அவதாரம் என்ற குறிப்பு இராமன் தந்தை ஏவலில் காடு சென்று மனைவியை இழந்த கதையை, நெடுமொழி என்று சிலம்பு கூறுமே யானால், இராமகாதை பல்லாயிரம் ஆண்டுகளாக இத் தமிழ்நாட்டில் வழங்கிற்று என்று கருதுவதில் தவறு இல்லை. சங்கப்பாட்டில் வரும் குறிப்புகளில் காணாத செய்தி, இராமன், வேத முதல்வனைப் பயந்தவன் என்பதாகும். எனவே இராமன் திருமாலின் அவதாரம் என்ற செய்தியும் இத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழைய செய்தி என்றே தெளிய வேண்டியுளது. பிற்காலத்தில் கம்பநாடன் திருமால் அவதாரமாக இராமனைக் கூறக் காரணமாக இருந்தவர்கள் ஆழ்வார்களே என்று சிலர் கூறக் கேட்கிறோம். அந்த வாதம் ஊற்றம் இல்லாததாகும். ஏன் எனில், முதல் ஆழ்வார்கள் தோன்றுதற்கு ஐந்நூறு ஆண்டுகளின் முன்னர்த் தோன்றிய சிலப்பதிகாரம், இராமன் திருமாலின் அவதாரமென்ற கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. இராமகாதையில் முக்கியமான நிகழ்ச்சி இராவண வதமாகும். அதையும் சிலப்பதிகாரம் பேசுகிறது: மூஉலகும் ஈர் அடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சே அடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோ அரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியோ? (ஆய்ச்சியர்-குரவை) (ஈர் அடி-இரண்டு கால்களால்; நிரம்பாவகைமாவலி கொடுத்த மூன்றடி மண் என்ற அளவில் குறைவுபடும்படி, தாவிய சேவடி-ஆகாயத்தில் நீட்டிய சிவந்த அடி, சேப்ப-காட்டில் நடப்பதால் சிவந்து தோன்ற சோ அரண்-சோ என்ற அரண்.)