பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 + கம்பன் - புதிய பார்வை என்று கூறிப் போந்தனர், இந்த விளக்கம் ஓரளவுக்குச் சரியானதே. அனுமன் பேச்சில் தன்னைப் பற்றிய முழு விவரமும் தந்த பகுதியில், இராகவன் ஈடுபட்டு, இப்பட்டத்தைத் தரவில்லை என்பதைக் காட்டுவதே இதுவரை கூறிவந்த விளக்கம். புலனடக்கத்தில் தலைநின்ற அனுமன், இராமன் கண்களை வருணிப்பதைச் சான்றாக வைத்து, இராமனின் புலனடக்கத்தையும், சான்றாண்மையையும், சமதிருஷ்டி யையும் குறிப்பாக உணர்த்தியதை வைத்துக் கொண்டு தான் இராமன் இப்பட்டத்தை வழங்கினான் என்று கருதுவதே நேரிதாகும். செல்வம், ஆணி, பதம் இதன்பிறகு அனுமன் இராமனை வணங்கலும், இராமன் அந்தணனாகிய அவன், தன்னை, வணங்குவது தகாது என்று கூற, அனுமன் தானும் குரக்கினத்தவனே என்று கூறித் தன் உருவத்தைக் கொண்டு நின்றான். இதனைக் கண்ட இராமன், தம்பியை நோக்கி காலம் அறுதியிட்டுக் கூற முடியாத வேதங்களாலும் குற்றமற்ற நல் ஞானத்தாலும் அறிந்துகொள்ள முடியாத ஒரு பதம் குரங்கு வடிவம் கொண்டு இவ்வுலகில் வந்தது என்று கூறுகிறான். 'நாட்படா மறைகளாலும், நவைபடா ஞானத்தாலும் கோட்படாப் பதமே ஐய! குரக்கு உருக்கொண்டது என்றான் - (அனுமப் படலம்-33) எனவே, இராகவன் சொல்லின் செல்வன் என்று தொடங்கி, உலகுக்கு எல்லாம் ஆணி என்று கூறி, இறுதியாக மறைகளுக்கு அப்பாற்பட்ட பதமே, குரக்கு உருக்கொண்டது என்று முடிக்கிறான் என்றால், இதைவிட அனுமனைப் பற்றி வேறு யாரும் எவையும் கூற வேண்டிய தேவை இல்லையல்லவா?