பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 கம்பன் - புதிய பார்வை அதனைத் தடுத்து, அவர்கள் கருணை உடையவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் என்றும் கூற வேண்டும். அதிலும் இராமன் தன் உரிமைப் பொருளையே தம்பிக்குக் கொடுத்துவிட்டவன் என்பதைக் கூறினால் சுக்ரீவன் மனம் மகிழ்ந்து அவர்களைக் காண வருவான். அதற்காகவே “எளிதில் அரசு தந்து உதவுவார்', 'இளையவற்கு உதவினான்’ என்றெல்லாம் கூறுகிறான். இத்துணை விரும்பத்தக்கவை இருக்கும் என்று அறிந்த பிறகும், நம்மைத் தேடி ஏன் வந்தார்கள் என்ற வினா அவன் மனத்தில் தோன்றினால் என்ன செய்வது என்று, இறுதியில் அதற்கும் விடை கூறுகிறான் மாருதி, நீ தவம் செய்தவன், மனம் தூயவன், எனவே நின்பால் வந்தனர்' என்கிறான். தவம் செய்தவர்களை நாடி அவர்களே வந்து இடர் தீர்க்கிறார்கள் என்று எடுத்துக்காட்டத்தான் அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தவர்கள் என்று மாருதி கூறுகிறான். அவன் நோக்கமும் அதுவே. அனுமன் மறைத்த செய்தி இதில் ஆழமானதும் நுணுக்கமானதும் ஆன ஒரு செய்தியும் உண்டு. இராம, இலக்குவர்களை யார் என்று. மாருதி வினவியபொழுது, இளையவன் தங்கள் வரலாறு முழுவதையும் அந்த வினாடிவரைக் கூறித் தீர்த்தான். அவன் இராமன்) தோற்றம் ஆதி, இராவணன் இழைத்த மாயப்புன் தொழில் ஈறாக, ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் (அனுமப்படலம்-29) என்றால், கவந்தன் 'சுக்ரீவன் துணையை நாடிப் பின் பிராட்டியைத் தேடும் முயற்சியில் ஈடுபடுக' என்று கூறினதையும் இலக்குவன் அனுமனிடம் கூறித்தானே இருப்பான். இதனை அறிந்திருந்தும், அனுமன் சுக்ரீவனிடம் பேசும்போது, உன் உதவியை நாடிவந்துள்ளனர் என்ற கருத்தைக் கூறாதது சிந்திக்கற்பாலது. மதி இலா நிருதர் கோன் மனைவியைத் தீய கான்நெறியின் உய்த்தனன்;