பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 281 அன்பு செல்கின்றதையும் உணர்ந்து, வந்தவன் திருமால் என்ற முடிவுக்கு வர முயல்கிறான். - - இந்த நாட்டு மரபுப்படி இறைவியின் அருள் இல்லாமல் இறைவன் திருவருளைப் பெற முடியாது. வைணவ மரபில் புருஷகார வைபவம் இன்றி, இறைவனின் அருளைப் பெறவோ, அவனை அறியவோ முடியாது. இப்பொழுது அனுமன் இராமனை மட்டும் காண்கிறானே தவிரப் பிராட்டியைக் காண்கிலன் அன்றோ? எனவே அவன் இராமன் யார் என்பதில் தொண்ணுாறு சதவீதம் உறுதி கொண்டிருந்தாலும், எஞ்சிய பத்துச் சதவீதம், முடிவுக்கு வர இயலவில்லை. இது முற்றுப் பெற அவன் இலங்கை செல்ல வேண்டியுளது. இராமன் தனி உரையாடலில், பிராட்டியின் அங்க அடையாளங்களை அறிந்துகொண்டு செல்கிறான். இதிலும் ஒரு வேடிக்கை இருக்கிறது. இராமன் பிராட்டியின் அடையாளம் கூறியதைப் பார்த்தால், அயோத்தியில் தசரதன் மருகியாக இருந்த பொழுது இருந்த வடிவ அமைப்புத்தான் நினைவில் வரும். நாடவிட்ட படலத்தில் முப்பத்து மூன்று பாடல்களில் இராகவன் பிராட்டியை வருணித்துக் கூறுகிறான். புல்னடக்கத்தில் தலைநின்ற அனுமன் அவன் கூறிய அங்க அடையாளங்களை அப்படியே மனத்தில் பதித்துக் கொண்டான். அசோகவனத்தில், பகைவன் தொல்லைகட்கு ஆட்பட்டு அவதியுறும் ஒரு கற்பின் செல்வியை, இராமனாலும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இராமன் செய்த சிறு தவறு இராமன் என்ற அன்புக் கணவன், தான் அன்றுவரை பழகிய சீதையைத்தான், தன் மனத்திரையில் எழுதி வைத்து வழிபட்டு வருகிறான். எனவே அவன் அனுமனிடம் பேசும்போது அந்த வடிவ அடையாளத்தையே கூறினான்,